வயநாடு நிலச்சரிவு: “நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி!” - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!
வயநாடு மாவட்டம் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடி நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார். இதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.
இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தொடர்ந்து 5-வது நாளாக மீட்பு படையினர் முழு வீச்சில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். தற்போதுவரை 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இதனிடையே, வயநாடு நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரள மாநிலத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடி நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும், பாதிப்புக்குள்ளான வயநாட்டுக்கு தமிழக மீட்புக் குழு சென்று உதவிக்கரம் நீட்டியது. தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் இந்த காசோலையை வழங்கியிருந்தார்.
Heartfelt gratitude to @evvelu for the generous contribution of ₹5 Cr towards relief efforts in landslide-hit #Wayanad on behalf of @mkstalin and Tamil Nadu. Your support and solidarity are deeply appreciated and will greatly aid in the rehabilitation and rebuilding efforts. pic.twitter.com/0aQcFCD5ua
— Pinarayi Vijayan (@pinarayivijayan) August 3, 2024
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உதவிக்கு நன்றி தெரிவித்து பினராயி விஜயன் தனது ட்விட்டர் (எக்ஸ்) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “தமிழ்நாடு சார்பாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாகவும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டுக்கு ரூ.5 கோடி தொகையளித்த எ.வ.வேலுக்கு மனமார்ந்த நன்றி. உங்களின் ஆதரவை வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு இது பெரிதும் உதவிகரமாக இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.