வயநாடு நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 151ஆக உயர்வு!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போதுவரை 151ஆக உயர்ந்துள்ளது.
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த வாரத்திலிருந்து இந்த பருவமழை தீவிரமடைந்தது. இதனால் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கேரளாவில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் வயநாட்டின் முண்டகை மற்றும் சூரல்மாலாவில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் அப்பகுதியில் இருந்த பல்வேறு வீடுகள், பாலம் மற்றும் சாலைகள் சேதமடைந்து. மேலும் 400 குடும்பங்களை 1000த்திற்கும் மேற்பட்டோர் இதில் சிக்கினர். நேற்றிலிருந்து இவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முண்டகை மற்றும் அட்ட மலை செல்ல வடம் பயன்படுத்தி தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, பெங்களூர் உட்பட பிற பகுதிகளில் இருந்தும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வயநாடு விரைந்துள்ளனர்.
தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கிய 151 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. மேலும் மீட்கப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இன்னும் 200க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 48 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. 96 பேரின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டது. மேலும் 32 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பேரிடரின் ஒருபகுதியாக 45 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. 3,069 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளர். நாடு முழுவதும் இந்த நிலச்சரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.