வயநாடு நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 125-ஆக உயர்வு! மீட்பு பணிகள் தீவிரம்!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 125-ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணத்தால் வயநாடு மாவட்டம், மேப்பாடி அருகே இன்று (ஜூலை 30) அதிகாலை 3 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேம்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை இரவு 8 மணி நிலவரப்படி, 125-ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நிலச்சரிவில் காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலச்சரிவில் சூரல்பாறை, வேளரிமலை, முண்டகயில், பொத்துகலு உள்ளிட்ட பகுதிகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளின் இடங்கள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பொத்துகலுவிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வயநாட்டில் மீட்புப் பணிகளுக்கு உதவிட, கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை மையத்திலிருந்து 2 விமானப்படை ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மீட்புப் பணியில் 250 வீரர்களும், உள்ளூர்வாசிகளும் ஈடுபட்டுள்ளதாகவும், 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை பெங்களூருவிலிருந்து வயநாடு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு உதவிகளை வழங்கக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு வீரர்கள் என 50 பேர் கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மீட்புப் படையினர் சம்பவ இடத்தை அடைவதே சவாலானதாக மாறியுள்ளது.