For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தரப்படும்" - ராகுல் காந்தி பேட்டி!

04:55 PM Aug 02, 2024 IST | Web Editor
 வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தரப்படும்     ராகுல் காந்தி பேட்டி
Advertisement

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த வாரத்திலிருந்து இந்த பருவமழை தீவிரமடைந்தது. இதனால் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி கேரளாவில் கனமழை பெய்தது.

இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 1000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 4வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேட்கர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்?

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 2வது நாளாக இன்று ( ஆகஸ்ட் - 2) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

“நேற்று முதல் நான் இங்கே இருக்கிறேன். நான் நேற்று சொன்னது போல், இது ஒரு பயங்கரமான சோகம். நேற்று நாங்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றோம். முகாம்களுக்கு சென்றோம். அங்குள்ள நிலைமையை மதிப்பீடு செய்தோம்.இன்று பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்தினோம். சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த எல்லா வகை உதவிகளையும் அளிக்க நாங்கள் இருக்கிறோம். இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தர காங்கிரஸ் உறுதியளிக்கிறது. கேரளாவில் இது போன்ற ஒரு சோகம் வேறு எங்கும் நிகழ்ந்ததில்லை என்று நினைக்கிறேன். இது ஒரு வித்தியாசமான சோகம். இதுதொடர்பாக மத்திய அரசிடமும், கேரள முதலமைச்சரிடமும் வலியுறுத்த உள்ளேன்.

முகாம்களில் இருப்பவர்களுக்குத் தேவையான வசதிகளை அளிக்க வேண்டும். மேலும்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வும் அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களில் பலர், மீண்டும் அங்கே செல்ல விரும்பவில்லை என தெரிவித்தனர். எனவே, அவர்கள் பாதுகாப்பான இடங்களில் மறுகுடியமர்த்தப்பட வேண்டும்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement