கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - ரசாயன கழிவுநீரால் நுரைபொங்கும் அபாயம்!
தொடர் மழையினால் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு மூன்றாவது நாளாக நீர்வரத்து அதிகரித்திருப்பதால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனிடையே அணையின் முழுகொள்ளளவான 44.28 அடிகளில் 41.98 அடிகள் நீர் நிரம்பி உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு விநாடிக்கு 1150 கனஅடிநீர் வரத்து உள்ள நிலையில், தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 1015 கனஅடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பை தொடர்ந்து ஆற்று நீரில் கலந்த ரசாயன கழிவுநீரால் நுரைப்பொங்கி காட்சியளிக்கிறது.
தென்பெண்ணை ஆற்றில் 1000 கனஅடிகளை கடந்து ஆற்றில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து செல்வதால், ஆற்றங்கரையோர கிராம மக்கள், அணை ஒட்டிய கிராமங்களான தட்டகானப்பள்ளி, பெத்த கொள்ளு, சின்ன கொள்ளு உள்ளிட்ட கிராம மக்கள் ஆற்றில் இரங்க வேண்டாம் என்றும் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கவோ வாகனங்கள், கால்நடைகளை கழுவவோ வேண்டாமென வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.