தொடர் மழையால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - மூன்றாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை!
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே நேற்று அணைக்கு வினாடிக்கு 2,647 கனஅடி நீர் வரத்தாக இருந்த நிலையில் இன்று அணைக்கு வினாடிக்கு 2,075 கன அடி நீர் வரத்தாக உள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 2,999 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி ஆகா இருக்கும் நிலையில் தற்போது அணையில் 40.51 அடிவரை நீர் உள்ளது. அணையில் இருந்து அதிக அளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ ஆடு மாடுகளை குளிப்பாட்டவோ கூடாது என வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் பெருக்கெடுத்து ஓடும் ஆற்று நீரில் குவியல் குவியலாக கடும் துர்நாற்றத்துடன் இரசாயன நுரைகளும் செல்கிறது. இதனால் ஓசூர் பகுதி கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.