ஹிட் அடித்ததா மோகன்லாலின் 'தொடரும்'? படம் எப்படி இருக்கு? - திரை விமர்சனம்!
மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி, 150 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய படம் ‘தொடரும்’. தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. இன்னொரு திரிஷ்யம் என்று கொண்டாடப்படும் இந்த படத்தை தருண் மூர்த்தி இயக்கியுள்ளார்.
சென்னையில் சினிமாவில் சண்டை பயிற்சியாளராக இருந்த மோகன்லால், தனது நண்பன் மரணத்தை தொடர்ந்து, கேரளாவில் கார் ஓட்டுனராக மாறுகிறார். அவரை நண்பர்கள், குடும்பத்தினர் ‘பென்ஸ்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள். மனைவி ஷோபனா, மகன், மகளை விட, தனது கறுப்பு நிற அம்பாசிட்டர் காரை அதிகமாக காதலிக்கிறார். ஒரு சூழ்நிலை காரணமாக அந்த கார் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறது. அதை திரும்ப பெற நண்பர்களுடன் போராடுகிறார் மோகன்லால்.
ஒரு கட்டத்தில் ‘‘காரை தருகிறோம். ஆனா, எங்களுடன் ஒரு கல்யாண வீட்டுக்கு சவாரி வா’’ என்று போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் அவரை வற்புறுத்துகிறார்கள். வேறு வழியின்றி மோகன்லால் அவர்களை அழைத்து செல்கிறார். அப்போது ஒரு பிணத்தை கார் டிக்கியில் ஏற்றி, நடு காட்டில் அதை புதைக்கிறார்கள். சில நாட்கள் கழித்து அந்த பிணம் வேறு யாருமல்ல, தனது மகன் என்பதை மோகன்லால் அறிகிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் 'தொடரும்' படத்தின் கதை.
மலையாள படங்களுக்கு உரிய அழுத்தமான திரைக்கதை, எளிமையான காட்சி அமைப்புகள் அற்புதமான நடிப்பு, திருப்பங்கள் ஆகியவை தொடரும் படத்திலும் இருக்கிறது. பென்ஸ் கேரக்டரில் வரும் மோகன்லால் முதற்பாதியில் தனக்கே உரிய ஸ்டைலில் காமெடியில் கலக்கி இருக்கிறார். காரை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை நண்பர்கள், குடும்பத்தினரிடம் சொல்லாமல் சொல்கிறார். காருக்கு சின்ன அடி பட்டால் கூட பதறுகிறார். மகனை ரொம்பவே பாசமாக கவனிக்கிறார். ஆனால், கார் சில காரணங்களால் போலீஸ் பிடியில் சிக்க, அதை மீட்க பதறுகிறார், கெஞ்சுகிறார், கதறுகிறார். மோகன்லால் தவிர வேறு யாரும் இப்படி நடிக்க முடியாது.
குறிப்பாக, ஷோபனாவுக்கும் அவருக்குமான சீன்கள் அவ்வளவு அழகு. போலீஸ் ஸ்டேஷனில் அவர் படுகிற பாடு, போலீசாரால் படுகிற அவமானம், கடைசியில் மகன் மரணத்துக்காக பொங்குகிற சீன்கள் செமயாக அமைந்துள்ளது. அந்த போலீஸ் ஸ்டேஷன் பைட் மாஸாக எடுக்கப்பட்டுள்ளது. மோகன்லாலின் குருவாக, சண்டை பயிற்சியாளராக இயக்குநர் பாரதிராஜா வருகிறார். அவர் சீன்கள், இளவரசு சீன்கள் டச்சிங்காக அமைந்திருக்கிறது. மோகன்லால் குடும்பம், நண்பர்கள், போலீசார் என அனைவரும் மனதில் நிற்கும் அளவிற்கு நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர். அதிரடி திருப்பமாக விஜய்சேதுபதியும் படத்தில் இடம்பெற்றிருக்கிறார். அது எப்படி என்பது சஸ்பென்ஸ்.
முதற்பாதியில் மெதுவாக நகரும் கதை, அடுத்த பாதியில் பழிவாங்கல், ஆக்ஷன் கதைகளத்திற்கு மாறுகிறது. மோகன்லாலுக்கு அடுத்த படியாக போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பிரகாஷ்வர்மா, சப் இன்ஸ்பெக்டராக வரும் அராஜக போலீசாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். மோகன்லால் மகன் ஏன் கொல்லப்படுகிறார், எப்படி கொல்லப்படுகிறார், பதிலுக்கு பாசக்கார அப்பாவான மோகன்லால் என்ன செய்கிறார் என்பது போன்ற சீன்கள் விறுவிறுப்பாக அமைந்துள்ளது.
உயிர் இல்லாவிட்டாலும் அந்த கறுப்பு நிற கார் அம்பாசிடர் காரும் ஒரு கேரக்டராகவே வாழ்ந்து இருக்கிறது. கார் சம்பந்தப்பட்ட சீன்களும், காரில் நடக்கும் சீன்களும்தான் படத்துக்கு உயிராக அமைந்துள்ளது. அந்த நிலச்சரிவு சீன்கள் மிரட்டுகிறது. இப்படத்தை பார்க்கும்போது பலருக்கு தங்களின் கார், அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் நினைவுக்கு வரும். மலையாள படமாக இருந்தாலும், அந்த குறை தெரியாமல் அழகாக தமிழில் மொழி பெயர்த்து கொடுத்திருக்கிறார் ஆர்.பி.பாலா.
ஆணவக்கொலைதான் படத்தின் முக்கியமான கரு. அதை காமெடி, சென்டிமென்ட், எமோஷன், ஆக்ஷன் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குநர் தருண் மூர்த்தி. திரிஷ்யம் படம் பல ஆண்டுகளை கடந்து மனதில் நிற்பதை போல, 'தொடரும்' படமும் மனதில் நிற்கும். மோகன்லால் மற்றும் படக்குழுவுக்கு விருதுகளும் நிச்சயம்.
- மீனாட்சி சுந்தரம், சிறப்பு செய்தியாளர்