தென்காசியில் உள்ள பழமையான கோயில் மசூதியாக மாற்றப்பட்டதா? உண்மை என்ன?
This news Fact Checked by ‘Newsmeter’
தென்காசி மாவட்டத்தில் உள்ள மிகப்பழமை வாய்ந்த கோயில் மசூதியாக மாற்றப்பட்டதாக பதிவுகள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் வக்பு நிலம் குறித்து காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. இந்த முன்னேற்றங்களுக்கு மத்தியில் கோயில் போன்ற இடங்கள் தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுபோன்ற காணொளியில், உட்புறம் கோயில் போல் காட்சியளிக்கிறது. இங்குள்ள தூண்கள் முற்றிலும் பச்சை நிறத்தில் உள்ளன. தமிழகத்தில் உள்ள ஒரு கோயிலை மசூதியாக மாற்றும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் பயனர் ஒருவர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, "தமிழ்நாடு: பண்டைய பொட்டல்புதூர் கோயில் மசூதியாக மாற்றப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.
இதே போன்ற அறிக்கையுடன் வைரலாகி வரும் வீடியோவை இங்கே, இங்கே பார்க்கலாம்.
உண்மை சரிபார்ப்பு:
இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை நியூஸ் மீட்டர் சரிபார்த்தபோது, இந்த வீடியோ தவறான கூற்றுடன் வைரலாகி வருவது தெரியவந்தது. இங்கு கோயில் மசூதியாக மாற்றப்படவில்லை. மாறாக அது 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தர்காவாகும்.
உண்மையைக் கண்டறிய, தொடர்புடைய முக்கிய வார்த்தைகள் கூகுளில் தேடப்பட்டது. தமிழக அரசின் அதிகாரபூர்வ உண்மைச் சரிபார்ப்பின் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் இந்தப் பிரச்னை தொடர்பான ஒரு பதிவு காணப்பட்டது. அந்த பதிவின் படி, “வைரலாகும் கூற்று பொய்யானது, அந்த வீடியோ உண்மையில் திருநெல்வேலி தென்காசியில் உள்ள பொட்டல்புதூர் மொஹைதீன் ஆண்டவர் தர்காவில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த தர்கா 17-ம் நூற்றாண்டில் (கி.பி. 1674) இஸ்லாமிய அறிஞர் மொஹிதீன் அப்துல் காதர் ஜிலானியின் நினைவாக கட்டப்பட்டது. இது திராவிட கட்டிடக்கலை பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. இது தவிர, இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் இந்த தர்காவிற்கு வந்து வழிபடுகின்றனர்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில சுற்றுலா இணையதளத்தில் கிடைத்த தகவலின்படி, “பொட்டல்புதூர் தர்கா தமிழ்நாட்டின் முக்கியமான மத ஸ்தலமாகும். தமிழ்நாட்டின் செழுமையான கட்டிடக்கலை பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மசூதி கலை மற்றும் கட்டிடக்கலையை விரும்பும் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாகும். சூஃபி துறவிகள், ஈரானில் இருந்து இந்தியாவுக்கான பயணத்தின் போது, பொட்டல்புதூர் கிராமத்தை அடைந்து, அங்கு குடியேறி, அங்குள்ள மக்களுக்கு இஸ்லாத்தை போதிக்க முடிவு செய்ததாக நம்பப்படுகிறது. பின்னர், தலைமை சூஃபி துறவியின் மரணத்திற்குப் பிறகு, மக்கள் 1674 இல் அவரது கல்லறையைக் கட்டினார்கள். பொட்டல்புதூர் தர்காவின் சிறப்பு அம்சம் அதன் அழகிய கட்டிடக்கலை. தர்காவின் பிரதான நுழைவாயில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளாலும், அக்கால கைவினைஞர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் எழுத்து வடிவங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த தர்கா முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களால் கட்டப்பட்டது. தர்காவின் உள் கருவறையில் ஒரு கல்லறை உள்ளது, இது ஒரு விரிவான வெள்ளி விதானத்தால் மூடப்பட்டுள்ளது. இந்த தர்காவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு நெய், புளி பட்டை மற்றும் மலர்களால் செய்யப்பட்ட புனித பாஸ்மா வழங்கப்படுகிறது.
மேலும் விசாரணை மற்றும் முக்கிய தேடலில், ஜூலை 2, 2013 அன்று டூரிசம் பெல் என்ற யூடியூப் சேனலில் இந்த தர்காவின் வீடியோ கிடைத்தது. வைரல் வீடியோவில் உள்ள கிளிப், இந்த யூடியூப் வீடியோவின் நடுவில் உள்ள கிளிப்பைப் போலவே உள்ளது.
முடிவு:
எனவே இந்த அனைத்து தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தின் தென்காசியில் உள்ள பழமையான இந்து கோயில் மசூதியாக மாற்றப்பட்டுள்ளது என்ற வைரல் செய்தி தவறானது என்று நியூஸ் மீட்டர் உறுதியாக கூறுகிறது. அது ஒரு தர்கா எனவும், 17ம் நூற்றாண்டில் இருந்து இந்த தர்கா உள்ளது எனவும், அனைத்து மதத்தினரும் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘Newsmeter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.