For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக்கூறி சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
05:43 PM Feb 17, 2025 IST | Web Editor
சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா    சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
Advertisement

திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார்.

Advertisement

இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பிறகு வழக்கு பட்டியலிடப்பட்வில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான்சத்தியன் ஆஜராகி, ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு வழங்கிய புகாரை திரும்ப பெற்றுக் கொண்டதாகவும், பின்னர் 2023 இல் கொடுக்கப்பட்ட புகாரையும் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். தூண்டுதலின் பேரில்தான் இந்த புகார் கொடுக்கப்பட்டதாகும் எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதற்கு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், இந்த வழக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு என்றும் ஏற்கனவே இது குறித்து நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும் அதை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார். காவல்துறையிடம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி நடிகை விஜயலட்சுமி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருவருக்கும் தொடர்பு இருந்ததாகவும், ஆனால் 2011 ஆம் ஆண்டு தான் இந்த விவகாரம் வெளிவந்ததாகவும் வாதிட்டார். மேலும் 2008ஆம் ஆண்டு மதுரை கோயிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாகவும், அப்போது முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் தொடர்பில் இருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, எதற்காக வழக்கை திரும்ப பெற்றார்? வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தார் கூறினாலும் காவல்துறை பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார். சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது என்று கூறிய நீதிபதி, சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
..

Tags :
Advertisement