காங்கிரஸ் தலைவர் கண்ணையா குமார் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? உண்மை என்ன?
This News Fact Checked by Logically Facts
காங்கிரஸ் தலைவர் கண்ணையா குமார் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற பொய்யான தகவல் பழைய புகைப்படத்துடன் பரப்பப்பட்டு வருவது அம்பலமாகியுள்ளது.
பொய்யாக பரப்பப்பட்ட தகவல்:
காங்கிரஸின் வடகிழக்கு டெல்லி தொகுதி வேட்பாளர் கன்ஹையா குமார் கிழக்கு டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறி அவரது புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
என்டிடிவியில் ஒரு செய்தியின்படி , குமார் மீது மை வீசப்பட்டது மற்றும் ஒரு நபர் அவரை அறைந்தார். ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் சாயா கவுரவ் சர்மாவும் தாக்கப்பட்டார். தாக்குதலுக்குப் பிறகு தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டனர். அதில், குமார் "தேசத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால்" அவரை தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் இணைந்து போட்டியிடுகின்றன.
வைரலான புகைப்படத்தில், குமார் வெள்ளை மற்றும் பச்சை நிற டி-ஷர்ட்டில் மருத்துவமனை படுக்கையில் படுத்திருப்பதைக் காட்டுகிறது. ஒரு X பயனர் படத்தைப் பகிர்ந்து அறைந்து தாக்கியதால் ஏற்பட்ட நிலை இது எனக் குறிப்பிட்டுள்ளார்."
இருப்பினும், இப்படம் 2016 இல் எடுக்கப்பட்டது. இதற்கும் சமீபத்திய சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
உண்மை கண்டறிதல்:
ரிவர்ஸ் இமேஜ் தேடல் மேற்கொண்டதில், மே 7, 2016 அன்று வெளியிடப்பட்ட NDTV கட்டுரைக்கு நம்மை அழைத்துச் சென்றது. அந்தக் கட்டுரையில் அதே படம் இருந்தது, அப்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) மாணவர் சங்கத் தலைவராக இருந்த குமார் ஒரு சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது உடல்நிலை மோசமடைந்ததால் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட பிறகு அரை மயக்க நிலையில் இருந்தார்.
அந்த செய்தியின் படி, "தேச விரோத முழக்கங்கள்" எழுப்பியதாக கூறி பல்கலைக்கழக நிர்வாகத்தால் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக குமார் மற்றும் JNU மாணவர்களும் ஏப்ரல் 28, 2016 முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தி க்விண்ட் அதே படத்தை, “ கன்னையா குமார் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்” என்ற தலைப்புடன் வெளியிட்டது . இந்த படம் ஜேஎன்யுஎஸ்யு தலைவர் மீடியா குழுமத்தில் இருந்து பெறப்பட்டது.
கன்னையா குமார் எதற்காக போராட்டம் நடத்தினார்?
பிப்ரவரி 9, 2016 அன்று , ஜேஎன்யூவில் மாணவர்கள் குழு ஒன்று "தேச விரோத முழக்கங்களை" எழுப்பியதாக கூறப்படும் வீடியோவால் சர்ச்சை வெடித்தது. மூன்று மாணவர்கள் - கன்ஹையா குமார், உமர் காலித் மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யா - தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பல்கலைக்கழகம் உயர்மட்டக் குழுவை அமைத்தது. குற்றம் உறுதியானதாக கூறி ஏப்ரல் 25, 2016 அன்று விசாரணை அறிக்கையை வெளியிட்டு, அபராதம் விதித்தது. குமாருக்கு ₹10,000 அபராதம் விதிக்கப்பட்டது, காலித் மற்றும் பட்டாச்சார்யா ஆகியோரும் ஒரு செமஸ்டருக்கான காலத்திற்கு மட்டும் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், சர்ச்சைகுரிய வீடியோ குறித்து ஆய்வு செய்ததில் அது போலீயானது என பின்னர் உறுதிசெய்யப்பட்டது.
முடிவு:
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனஹையா குமாரின் புகைப்படம் எட்டு வருடத்திற்கு முன் 2016-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். இது தான், தேர்தல் பரப்புரையின் போது அறைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொய்யாகப் பகிரப்பட்டது.
Note : This story was originally published by ‘Logically Facts’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.