This News Fact Checked by ‘Newsmeter’
உத்தரப்பிரதேசம் மகா கும்ப மேளாவிற்கு வந்ததாக ஒரு துறவியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் அவர் எரியும் தீயில் படுத்திருப்பதாக தெரிகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி முதல் மகா கும்பமேளா தொடங்கியுள்ளது. இதற்காக நாடு முழுவதிலுமிருந்து முனிவர்கள் மற்றும் துறவிகள் பிரயாக்ராஜுக்கு வருகிறார்கள். இதற்கிடையில், மகா கும்பத்திற்கு வந்ததாகக் கூறப்படும் ஒரு துறவியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் அவர் எரியும் தீயில் கிடப்பதைக் காணலாம். இந்த வீடியோவில், துறவியின் உடைகள் அல்லது முடிகள் தீப்பிடிக்காது அல்லது அவரது உடலின் எந்தப் பகுதியும் எரியவில்லை. சில பயனர்கள் இந்த வீடியோ மகா கும்பத்தின் வீடியோ என்று கூறுகின்றனர்.
ஃபேஸ்புக் பயனர் ஒருவர் வீடியோவைப் பகிர்ந்து, “ஹரித்வாரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகாகும்பத்தின் போது இந்திய துறவிகள் தீக்குளிப்பதைக் கண்டு பிபிசி சேனல் நிருபர் அதிர்ச்சியடைந்தார். தனது நிகழ்ச்சிகளில் எப்போதும் இந்து மதத்தை எதிர்மறையாகக் காட்டும் பிபிசி, இப்போது தனது சேனலில் இந்திய புனிதர்களை உலக மக்களுக்கு மரியாதையுடன் காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது” என பதிவிட்டுள்ளனர்.
இதே போன்ற அறிக்கையுடன் வைரலாகி வரும் வீடியோவை இங்கே, இங்கே பார்க்கலாம்.
உண்மைச் சரிபார்ப்பு:
நியூஸ்மீட்டர் இந்த செய்தியின் உண்மைத்தன்மையை சரிபார்த்து, இந்த வீடியோ தவறான கூற்றுகளுடன் வைரலாகி வருவதைக் கண்டறிந்தது. இந்த வீடியோ மகா கும்பமேளாவுடன் எந்த தொடர்பும் இல்லை அல்லது பிபிசியால் தயாரிக்கப்பட்டது அல்ல. தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழும் ஒரு துறவியின் ஆவணப்படக் காணொளி இது என கண்டறிந்தது.
உண்மையை அறிய, வைரலான வீடியோவின் சில முக்கிய பிரேம்களை எடுத்து கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மேற்கொண்டபோது, அந்த வீடியோ பல யூடியூப் சேனல்களில் பதிவேற்றப்பட்டது தெரியவந்தது. நவம்பர் 18, 2009 அன்று, ஆஜ் தக் தனது அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இந்த துறவி தொடர்பான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஆஜ் தக் இந்த வீடியோவை 4 பகுதிகளாக பிரித்துள்ளது. அதில், “தஞ்சாவூர் ஸ்ரீ ராமபாவு சுவாமி, காவி அங்கி உடுத்தி, பல மணிநேரம் தீயில் தியானம் செய்தாலும், தீக்காயம் ஏதும் ஏற்படவில்லை. அவரது பக்தர்கள் இதை ஒரு அதிசயமாக கருதுகின்றனர்” என கூறப்பட்டுள்ளது. ஆஜ் தக் பதிவேற்றிய வீடியோவில் வைரலான வீடியோவின் கிளிப்பை 2 நிமிடம் 52 வினாடிகளில் காணலாம்.
இந்த வீடியோ 28 செப்டம்பர் 2012 அன்று தேவபுத்தம் என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டது. இதற்கு 'அக்னி யோகி- பக்தியின் ஆன்மீக அறிவியல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. வைரல் வீடியோவைப் போன்ற காட்சிகள், 17:30 நிமிடத்தில் காட்டப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, “ஸ்ரீ ராம்பாவ் சுவாமிகள் தன்னை நெருப்புடன் இணைத்துக்கொள்ளும் தனித்துவமான திறன் கொண்டவர். இந்த ஆவணப்படம் அவரது கதையைச் சொல்கிறது மற்றும் விஞ்ஞான எதிர்பார்ப்புகளை மிஞ்சியுள்ளது. ஸ்ரீ குரு ராம்பாவ் ஸ்வாமிகள் கடந்த 45 ஆண்டுகளாக இந்த அரிய மற்றும் தனித்துவமான 14 மணிநேர அக்னிஹோத்ராவை தினமும் செய்து, உலக அமைதி மற்றும் அனைத்து நபர்களின் அறிவொளிக்கும் வேண்டுகிறார். சாப்பிடுவதும், குடிப்பதும் அரிதாக இருக்கும் ஸ்ரீ குரு, ஒரு நாளைக்கு 3 மணி நேரம் தூங்குகிறார்.” என கூறப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டு கும்பமேளாவின் போது ஒரு துறவி தீயில் உறங்குவதைப் பற்றி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளதா என்றும் தேடியபோது, அதுபோன்ற எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை.
இந்த அனைத்து தகவல்களின் அடிப்படையில், ஹரித்வார் கும்பமேளாவிற்கு வந்திருந்த ஒரு துறவி தீயில் உறங்கிக் கொண்டிருந்ததாக சமூக வலைதளவாசிகள் சிலர் பொய்யாக பரப்பி வருகின்றனர். இந்தக் காணொளி கும்பமேளாவைச் சேர்ந்தது அல்ல, சில ஆண்டுகள் பழமையானது என்பது உறுதி செய்யப்பட்டது.