ரமலான் மாதத்தில் தர்பூசணியில் சிவப்பு நிறத்தை அதிகரிக்க ரசாயனம் கலக்கப்பட்டதா? - வைரல் வீடியோ உண்மையா?
This News Fact Checked by ‘Boom’
தர்பூசணியின் சிவப்பு நிறத்தை செயற்கையாக அதிகரிக்க அதில் ரசாயனங்கள் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொலி ரமலான் மாதத்துடன் இணைத்து வகுப்புவாத கூற்றுடன் பகிரப்படுகிறது. வைரலான காணொலி திருத்தப்பட்டது என்பதை பூம் தனது விசாரணையில் கண்டறிந்தார். உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தி சோஷியல் ஜங்ஷன் யூடியூப் சேனலால் இந்த காணொலி உருவாக்கப்பட்டுள்ளது. வீடியோவில், தர்பூசணி, மருந்து மற்றும் ஊசியுடன் ஒரு இளைஞன் தண்ணீரில் ரசாயனம் கலந்து சிவப்பு நிறத்தை உருவாக்குவதைக் காணலாம், அந்த இளைஞன் காவல்துறையினரால் பிடிபட்டிருப்பதை வீடியோ காட்டுகிறது.
இந்தியா முழுவது மார்ச் 2 ஆம் தேதி முதல் ரமலான் மாதம் தொடங்கியுள்ளது. முஸ்லிம் சமூகத்தில் ரமலான் மாதம் ஒரு புனித மாதமாக கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்த காணொலியை ரமலான் மாதத்துடன் இணைத்து வகுப்புவாத கூற்றுடன் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. 'ரமலானில் முஸ்லிம்களின் உயிரைக் காப்பாற்றுங்கள், இந்த வீடியோவைப் பகிர்வதன் மூலம் நல்ல செயல்களைப் பெறுங்கள், ரமலானில் நோன்பு திறப்பதற்கு தர்பூசணியை அதிகமாக வாங்குகிறார்கள். இதனை பகிருங்கள் என்று ஒரு பேஸ்புக் பயனர் வீடியோவைப் பகிர்ந்து எழுதினார்.
இந்த காணொளி அதே கூற்றுடன் சமூக ஊடக தளமான X- லும் வைரலாகி வருகிறது. காப்பக இணைப்பு
உண்மைச் சரிபார்ப்பு :
வைரல் காணொலியுடன் இணைக்கப்பட்ட டீம் ரைசிங் ஃபால்கன் என்ற வாட்டர்மார்க்கை நாங்கள் தேடியபோது, அதன் X கணக்கை அடைந்தோம் . மார்ச் 2 ஆம் தேதி வீடியோவைப் பகிர்ந்த பயனர், 'ரமலானில் முஸ்லிம்களின் உயிரைக் காப்பாற்றுங்கள், இந்த வீடியோவைப் பகிர்வதன் மூலம் நல்ல செயல்களைப் பெறுங்கள், ரமலானில் நோன்பு திறப்பதற்கு தர்பூசணியை அதிகமாக வாங்குகிறார்கள். இதனை பகிருங்கள் என எழுதினார்.
வைரலான வீடியோவின் முக்கிய பிரேம்களை ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடியபோது, வைரலான வீடியோவைப் போன்ற ஒரு வீடியோவுடன் தொடர்புடைய இந்தியா டுடேயின் மே 2024 சிறப்பு அறிக்கையைக் கண்டோம். தர்பூசணியில் கலப்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தி சோஷியல் ஜங்ஷன் யூடியூப் சேனல் ஒரு காணொலியை உருவாக்கியுள்ளது என்பதை இந்தியா டுடே செய்தியிலிருந்து நாங்கள் அறிந்தோம்.
இந்த காணொலியில் , ஊசி மூலம் தர்பூசணியில் ரசாயனங்கள் செலுத்தப்படுவது காட்டப்பட்டுள்ளது. அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள காணொலியில் காணப்படும் இளைஞர், வாயில் கைக்குட்டை கட்டப்பட்ட நிலையில், வைரல் காணொலியிலும் இருப்பதைக் கண்டறிந்தோம். மேலும் பின்னணியும் அதேதான். இதற்குப் பிறகு நாங்கள் தி சோஷியல் ஜங்ஷன் யூடியூப் சேனலைத் தேடினோம். ஏப்ரல் 29, 2024 அன்று சேனலில் பதிவேற்றப்பட்ட அசல் காணொலியைக் கண்டோம் . இதில் அந்த இளைஞர் தனது பெயரை ஆயுஷ் வர்மா என்று சூட்டியுள்ளார். இந்த காணொலியின் தொடக்கத்தில், வைரலான காட்சிகளில் உள்ளதைப் போன்ற எந்த குரல் ஒலிப்பதிவையும் நாங்கள் கேட்கவில்லை. வைரலான காணொலியில் வேறு ஒரு குரலைச் சேர்ப்பதன் மூலம் ஒரு வகுப்புவாத கூற்று முன்வைக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
அசல் காணொலியின் 28வது வினாடியில் காணொலி உருவாக்கியவரால் ஒரு மறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதில், 'இந்த காணொலி முற்றிலும் கற்பனையானது, காணொலியில் காட்டப்பட்டுள்ள அனைத்து சம்பவங்களும் ஸ்கிரிப்ட் செய்யப்பட்டவை, மேலும் இந்த காணொலி விழிப்புணர்வு நோக்கங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது...' என்று எழுதப்பட்டுள்ளது. சோஷியல் ஜங்ஷன் யூடியூப் சேனலில் உணவு கலப்படம் தொடர்பான பல ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட வீடியோக்கள் உள்ளன. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த காணொலிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சேனல் தெரிவித்துள்ளது.
Note : This story was originally published by ‘Boom’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.