போர் பதற்றம் - பஞ்சாப் Vs மும்பை போட்டியில் ஏற்பட்ட மாற்றம்!
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், எல்லை பகுதிகளில் இரு நாடுகளும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தியா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று(மே.07) பாதுகாப்பு கருதி இமாச்சலப் பிரதேசம் தரம்சாலா மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியானது.
குறிப்பாக இன்று(மே.08) நடைபெறவுள்ள பஞ்சாப் Vs டெல்லி மற்றும் மே 11 ஆம் தேதி நடைபெற உள்ள பஞ்சாப் Vs மும்பை ஆகிய போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால், இன்னும் சற்று நேரத்தில் அதே மைதானத்தில் பஞ்சாப் Vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் Vs மும்பை போட்டி மட்டும் வேறு மைதானத்திற்கு மாற்றப்படவுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி மே 11 ஆம் தேதி நடைபெற உள்ள போட்டி தரம்சாலாவிலிருந்து அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் அந்நாட்டில் நடந்து வரும் நிலையில், இன்று அங்குள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தாக்குதல் நடந்துள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து பாகிஸ்தான் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.