வக்ஃபு வாரிய கூட்டுக்குழு - ஆ.ராசா உள்பட 10 எம்.பி-க்கள் சஸ்பெண்ட்!
நாடாளுமன்ற லோக்சபாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ந் தேதி வக்ஃப் வாரியம் (வக்ஃபு) தொடர்பாக இரண்டு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, இது வக்ஃப் வாரியத்தின் பணியை சீரமைக்கும் மற்றும் திறமையான நிர்வாகத்தை உறுதி செய்யும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அறிமுக நிலையிலேயே திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனையடுத்து வக்பு மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ஜகதாம்பிகா பால் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் வக்பு மசோதா மீதான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். நிலைக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பாலுக்கு எதிராக தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கல்யாண் பானர்ஜி, முகமது ஜாவேத், ஆ. ராசா, அசாதுதீன் ஓவைசி, நசீர் ஹுசைன், மொஹிபுல்லா, முகமது அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதீம்-உல் ஹக், இம்ரான் மசூத் ஆகியோர் கூட்டுக்குழுவில் இருந்து இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.