For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

12:30 PM Apr 24, 2024 IST | Web Editor
விவிபேட் வழக்கு  சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்
Advertisement

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், விவிபாட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி பிற்பகல் 2 மணிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். 

Advertisement

வாக்காளர்கள் தங்களது வாக்கினை யாருக்கு செலுத்தினார்கள் என்பதை உறுதிபடுத்த மின்னணு வாக்கு இயந்திரத்துடன் விவிபேட் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஒருவர் வாக்கை செலுத்தியதும் 7 விநாடிகளுக்கு விவிபேட் ஒப்புகை சீட்டில் வாக்காளர் பதிவான தங்கள் வாக்கை சரி பார்க்க முடியும். மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் வாக்கு இயந்திரத்தில் எண்ணப்பட்டு விட்டதா என்பதை விவிபேட் இயந்திரம் மூலம் வாக்காளர் சரிபார்த்து உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீர்த்திருத்தத்திற்கான சங்கம் மனுத்தாக்கல் செய்தது.

அதேபோல், தேர்வு செய்யப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை மட்டும் மொத்த வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு பதிலாக 100% ஒப்புகை சீட்டுகளையும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமென சமூக ஆர்வலர் அருண் குமார் அகர்வால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகள் மீதான விசாரணையின்போது, “2019-ம் ஆண்டு தேர்தலில் தேர்தல் ஆணையத்தில் உள்ள தரவுகளை மாநிலம் வாரியாக பகுப்பாய்வு செய்து பார்த்தபோது, சுமார் 373 தொகுதிகளில் முரண்பாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. காஞ்சிபுரம், மதுரை, தர்மபுரி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளுடன், எண்ணிப்பட்ட வாக்குகளுடன் பொருந்தி வரவில்லை” என முக்கியத்துவம் வாய்ந்த வாதங்களை மனுதாரர் தரப்பு முன்வைத்தது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் விவிபேடு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க கோரும் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 18-ம் தேதியன்று உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது. 

இந்நிலையில், விவிபாட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய  வழக்கு இன்று (ஏப். 24) உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நாங்கள் சில விளக்கங்களையும், சந்தேகங்களையும் கேட்க விரும்புகிறோம். வாக்கு இயந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோலர் என்பது கட்டுப்பாட்டு அலகுடன் இணைக்கப்பட்டுள்ளதா? அல்லது ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் நிறுவப்பட்டுள்ளதா? தரவுகள் 40 நாட்கள் சேமிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அது 45 நாட்கள் என கூறப்பட்டுள்ளது.

தேர்தல் மனுக்களுக்கான கால அவகாசம் 30 நாட்களாக இருந்தது. ஆனால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தல் மனுக்களுக்கான வரம்பு காலம் 45 நாட்களாகும். எனவே அதற்கேற்ப, சேமிப்பிற்கான காலத்தை அதிகரிக்க வேண்டும் அல்லவா? எத்தனை சின்னங்கள் Loading அலகுகள் உள்ளன? வாக்குப்பதிவிற்கு பிறகு கட்டுப்படுத்தும் அழகு சீல் செய்யப்படுமா அல்லது விவிபெட் கருவிகள் தனியாக வைக்கப்படுமா? என்பது தொடர்பாக விளக்க வேண்டும். எனவே பிற்பகல் 2 மணிக்கு சம்மந்தப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் அல்லது அதிகாரியை ஆஜராக அழைக்கிறோம்” இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் Code குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்ற மனுதாரர்கள் தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், சோர்ஸ் Code விவரங்களை வெளியிடுவது தேவையற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என கருத்து தெரிவித்தனர்.

Tags :
Advertisement