For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக குரல்”- இந்தியா கூட்டணி முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

யுஜிசி வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்துமாறு இந்திய கூட்டணி முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
06:17 PM Jan 20, 2025 IST | Web Editor
“யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக குரல்”  இந்தியா கூட்டணி முதலமைச்சர்களுக்கு மு க ஸ்டாலின் கடிதம்
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9ஆம் தேதியன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள்-2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள்-2025 ஆகிய இரண்டு வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

இந்நிலையில் இத்தீர்மானம் போன்று டெல்லி, இமாச்சல பிரதேசம், ஜம்மு- காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா சட்டப் பேரவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றி யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்திட வேண்டுமென்று கோரி, இம்மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுகளின் பங்கைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து மாநில முதலமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அனைத்து மாநிலங்களும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுப்பது அவசியம் என தான் உறுதியாக நம்புவதாகக் குறிப்பிட்டு, தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தைப் போன்று தங்களது மாநில சட்டமன்றங்களிலும் இதுதொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா முதலமைச்சர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளின் உரிமைகளைத் தெளிவாக மீறும் செயல் என்றும், இது நமது பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், அதிகாரத்தை மையப்படுத்தி, நமது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம் என அம்மாநில முதலமைச்சர்களை தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே, தனது இந்தக் கோரிக்கையை மேற்குறிப்பிட்ட மாநில முதலமைச்சர்களும் பரிசீலித்து, தங்களது மாநில சட்டமன்றங்களில் இதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags :
Advertisement