மாநிலக் கட்சியாக உருவெடுத்த விசிக - சாதித்துக் காட்டிய ஆதவ் அர்ஜுனா!
மக்களவைத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநிலக் கட்சி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. இதனை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா செய்து காட்டியுள்ளார்.
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள மற்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் எல்லாம் விரைவாக வெளியானாலும் சிதம்பரம் தொகுதி மட்டும் நீண்ட நேரம் இழுபறியைச் சந்தித்து வந்தது. அந்த தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். மக்களவைத் தேர்தல் போன்ற பெரிய தேர்தலில் 3200 என்ற சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் போராடி வென்றார் திருமாவளவன்.
தமிழ்நாடு முழுவதும் செல்வாக்குள்ள விசிக தலைவர் திருமாவளவன் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றது அக்கட்சியினருக்கு முக்கிய படிப்பினையாக அமைந்தது. அடுத்த தேர்தலுக்குள் கட்சியைப் பலப்படுத்த வேண்டும், கட்சிக்கான உரிய அங்கீகாரத்தைப் பெற வேண்டும், குறிப்பாகச் சிதம்பரத்தில் தலைவரின் வெற்றியை இயல்பாக உறுதிப்படுத்த வேண்டும் என்று பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்கள்.
கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் தமிழ் மற்றும் தமிழ்நாடு நலன் சார்ந்து நாடாளுமன்றத்தில் அதிகம் ஒலித்த குரலாக திருமாவுடையதாக இருந்தாலும், உள்ளூர் அளவில் அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ‘தொகுதி பக்கமே வருவதில்லை, தொகுதி பிரச்னைகளில் கவனம் செலுத்தவில்லை’ போன்ற விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், அதே சிதம்பரம் தொகுதியில் இத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவது என்று முடிவானது.
கடந்த தேர்தலிலேயே போராடி அவர் வென்ற நிலையில், மேற்கூறிய விமர்சனங்களைக் கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடி விசிகவினருக்கு இருந்தது. இந்நேரத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா களத்தில் இறங்கினார். ‘திருமாவை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பது என்னுடைய பொறுப்பு' என்று தேர்தல் அறிவிக்கும் சில மாதங்கள் முன்பே பறைசாற்றினார்.
ஆதவ் அர்ஜுனா தலைமையிலான 'Voice of Commons' தேர்தல் வியூக நிறுவனம் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியைப் பற்றிய அனைத்து தகவல்களையும் சல்லடையாகச் சலித்து எடுத்து உறுதியான வெற்றிக்காகக் களத்தைத் தயார்ப்படுத்தினார்கள். திமுக கூட்டணியில் சமரசமின்றி தனிச் சின்னத்தை திருமாவளவன் பெற்றது ஒருபுறம் என்றால், தேர்தல் ஆணையத்திடம் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பானை சின்னமும் வென்றெடுக்கப்பட்டது. அது இன்று அவர்களின் வெற்றிச் சின்னமாகவும் மாறியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகளில் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வென்று மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது.
இதற்கெல்லாம் காரணம் என்னவென்று விசிகவின் மூத்த பிரமுகர்கள் ஒருசிலரிடம் பேசிய போது, “தேர்தல் தொடங்குவதற்கு 8 மாதத்திற்கு முன்பே சென்னை ஒய்எம்சிஏ போன்ற பிரமாண்ட மைதானத்தில் வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. விசிகவில் இதற்கு முன் இப்படியொரு கூட்டத்தைப் பார்த்ததில்லை. அந்தளவிற்கு திமுக போன்ற பெரிய கட்சிகளுக்கே முன்னுதாரணமாகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. பிறகு, இதற்கெல்லாம் காரணம் கட்சியில் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வரும் ஆதவ் அர்ஜுனா என்று தெரிய வந்தது. அவருடைய 'Voice of Commons' குழுவே அதை ஒருங்கிணைத்து நடத்தியிருந்தார்கள்” என்றனர்.
ஒருசில வட மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்காக நடத்தப்பட்ட கூட்டமே மாநாட்டைப் போல் காட்சியளித்த நிலையில், திருச்சியில் நடைபெறப் போகும் 'வெல்லும் சனநாயகம்' மாநாடு எப்படி இருக்கப் போகிறது என்ற ஆர்வம் அனைவரையும் தூண்டியது. சென்னை மற்றும் நெல்லை வெள்ளம் காரணமாக இருமுறை தேதி மாற்றப்பட்டு, பிறகு காரணத் தேதியுடன் குடியரசு தினத்தில் நடந்தது. மேடையின் பிரமாண்டம் தொடங்கி மாநாட்டுப் பந்தல் வரை தேசிய கட்சிகளை விஞ்சி கூட்டணிக் கட்சிகளை வாயடைக்கச் செய்தது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு கட்சியின் புதிய பரிணாமத்தைக் கண்டு குதூகலித்தார்கள்.
கடந்த மாநாடுகளை விட இந்த மாநாட்டில் ஏற்பட்ட புதுமைகளைப் பற்றி சில மூத்த தலைவர்கள் தெரிவித்தது, “முந்தைய மாநாடுகளில் எல்லாம் கட்சி நிர்வாகிகள் ஆங்காங்கே தனித்தனியாக நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்வார்கள். மாநாட்டுக்குழு இருந்தாலும் அவர்கள் ஒருங்கிணைந்து பணி செய்வதில் ஏதோ தவறியிருந்தது. ஆனால், இந்தமுறை அது அனைத்தையும் ஆதவ் அர்ஜுனா மேற்கொண்டார். அவரது குழுவே மாநாட்டுக்கான முன் தயாரிப்பு பணியிலிருந்து ஒவ்வொரு அசைவையும் இயக்கினார்கள். அந்த கட்டமைக்கப்பட்ட குழு ஈடுபாடே இந்த மாநாட்டை தனிச் சிறப்புமிக்கதாக மாற்றியது. இதனால் தான் கட்சியின் தலைவர் திருமாவளவன் 'இத்தகைய பிரமாண்ட மாநாட்டை முன்னின்று நடத்தியது 'Voice of Commons' குழுதான் என்று மாநாட்டிலேயே ஆதவ் அர்ஜுனாவை மேடையேற்றிக் கௌரவித்தார்” என்றனர்.
சிதம்பரத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு நிர்வாகியிடம் பேசியபோது, “கடந்த தேர்தல்களில் தலைவர் மட்டுமே அனைத்து இடங்களுக்கான பிரசாரங்களுக்கும் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இந்த முறை தலைவர் ஒவ்வொரு இடத்திற்குச் செல்லும் முன்பே அவருடைய பிரசாரம் சென்றுவிட்டது. மொபைல் ஸ்கேனர் பிரசாரம், பிரமாண்ட பானையுடன் கூடிய பிரசார வாகனம் எனப் பல விஷயங்களை புதுசாக பார்க்க முடிந்தது” என கூறினர். சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் 'Voice of Commons' குழு சார்பாக வார் ரூம் அமைத்து செயற்பட்டதே இதற்கெல்லாம் காரணம் என்று கூறப்படுகிறது’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
இவை அல்லாமல் ஆதவ் அர்ஜுனா நேரடியாகக் களத்தில் சென்று செய்த சில பணிகளை வியப்பாகப் பகிர்கிறார்கள். 'சிதம்பரம் போன்ற பல்வேறு சமூக மக்கள் வாழும் பகுதியில் அனைத்து மக்களையும் கவர்ந்தாக வேண்டிய சூழல் இருந்தது. இதற்காக ஆதவ் அர்ஜுனா பல சமூகத் தலைவர்களைத் தனிப்பட்ட நட்பின் அடிப்படையில் சந்தித்துப் பேசினார். குறிப்பாக, சிதம்பரத்தில் தேவர் சமூக மக்களிடையே செல்வாக்குமிக்க தலைவராக விளங்கும் ஸ்ரீதர் வாண்டையாரை சந்தித்துப் பேசி விசிகவுக்கான ஆதரவைப் பெற்றார். சிதம்பரத்தில் நடந்த இறுதிநாள் பிரசாரத்தையே ஸ்ரீதர் வாண்டையார் ஒருங்கிணைக்கும் அளவிற்கு ஆதரவைப் பலப்படுத்தினார் ஆதவ் அர்ஜுனா.'
'மற்றொரு விஷயமாக அதிருப்தியிலிருந்த ஒருசில சமூக மக்களை நேரடியாகச் சென்று சந்தித்து ஆதரவைப் பெற்றார். சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட கிள்ளை கிராமத்தில் இருளர் சமூக மக்கள் பெருவாரியாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்குத் தலைவர் தங்களை வந்து பார்க்கவில்லை என்பது போன்ற ஒருசில குறைபாடுகள் இருந்தது. அந்த கிராமத்திற்கு நேரடியாகப் புறப்பட்டார் ஆதவ் அர்ஜுனா. கிள்ளை கிராமத்து மக்களுக்கு நம்பிக்கையை விதைத்தவராகவும் அங்கிருந்த குழந்தைகளுக்குக் கல்வி குறித்த விழிப்புணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியவராகவும் ஒரு நாளைக் கழித்தார். இவை அனைத்தும் விசிக-விற்கான வாக்கு வங்கியை மேலும் உறுதிப்படுத்தியது' என்று பேசினார்.
கட்சிக்காக பணியை ஆரம்பித்த முதல் நாளிலிருந்து சிதம்பரத்தில் பேசிய இறுதி நாள் பிரசாரம் வரை ஆதவ் அர்ஜுனா விடாமல் சொல்லி வந்த ஒரே விஷயம் 'தலைவரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பேன், விசிக-வை அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சியாக உருவாக்குவேன்!’
இன்று, அவர் கூறியபடி நாடாளுமன்றத் தேர்தலில் இரு தொகுதியில் சொந்த சின்னத்தில் வென்று மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை வென்றுள்ளது விசிக. கட்சி தொண்டர்களின் அயராத உழைப்போடு கட்சி செயற்பாட்டில் பல புதுமைகளை நிகழ்த்திய துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் பங்களிப்பும் இதற்கான காரணம் என்று சொல்வதாகவே திருமாவளவன் மாநாட்டில் அவருக்கு அளித்த அங்கீகாரம் அமைந்தது.