புரட்டாசி மாத பிரதோஷம், அமாவாசை | #Sathuragiri கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி!
புரட்டாசி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் அக்- 3ம் தேதி வரை சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை தினமான இன்று (செப்டம்பர் - 30ம் தேதி) முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் நீர்நிலைகளில் குவிந்து வருகின்றனர். புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் வரும் அக்டோபர் 3ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : #B.ed படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!
இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே, திடீரென மழை பெய்தால் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.