விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து - உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல்!
விருதுநகர் அருகே கோவில்புலிக்குத்தியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான சத்ய பிரபா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், பேன்சி ரக பட்டாசு தயாரிக்க ரசாயன மூலப் பொருட்களை கலவை செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால் சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பயங்கர அதிர்வு ஏற்பட்டது. பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறி வெடித்து ஆலையிலிருந்து வெளியேறினர். இருப்பினும் 6 பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “விருதுநகர் மாவட்டம் சின்னவாடியூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும்,7 பேர் படுகாயம் அடைந்ததாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
விருதுநகர் மாவட்டத்தில் தொடர்கதையாகி வரும் பட்டாசு ஆலை விபத்துகள் குறித்து திமுக அரசிடம் சுட்டிக்காட்டுவதை கண்டுகொள்ள மனமில்லாமல், தொடர்ந்து அலட்சியப் போக்குடன் செயல்பட்டு இத்தகைய விபத்துகளுக்கு காரணமாக அமைவது கடும் கண்டனத்திற்குரியது.
விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்குமாறும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறும், இனியாவது பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை முறையான ஆய்வு மேற்கொள்ளுமாறும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்”.
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.