2024 International Emmy Awards நிகழ்ச்சியின் முதல் இந்திய தொகுப்பாளரானார் விர்தாஸ்!
சர்வதேச எம்மி விருதுகள் நிகழ்ச்சியை இந்தியாவைச் சேர்ந்த நகைச்சுவை கலைஞரும், பாலிவுட் நடிகருமான விர்தாஸ் தொகுத்து வழங்குகிறார்.
சிறந்த திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படுவது போல் டிவி தொடர்கள், நிகழ்ச்சிகள், ஓடிடி தொடர்கள் ஆகியவற்றுக்கு ஆண்டுதோறும் சர்வதேச எம்மி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சர்வதேச எம்மி விருதுகள் நிகழ்ச்சி வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை இந்தியாவைச் சேர்ந்த நகைச்சுவை கலைஞரும், பாலிவுட் நடிகருமான விர்தாஸ் தொகுத்து வழங்க உள்ளார். இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் இவரை தொகுப்பாளராக நியமித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முதல் இந்தியராக விர்தாஸ் உள்ளார்.
இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விர்தாஸ் இரண்டுமுறை எம்மி விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு நகைச்சுவை பிரிவில் எம்மி விருதினைப் பெற்றார். 2023ஆம் ஆண்டும் ‘லேண்டிங்’ நிகழ்ச்சிக்காக விருது பெற்றார். தற்போது ஒரு தொகுப்பாளராக எம்மி மேடைக்கு செல்ல உள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு காமெடி நிகழ்ச்சியில், இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது நினைவுகூரத்தக்கது.