விரைவில் சச்சினின் உலக சாதனையை முறியடிக்கும் #ViratKolhi!
வங்கதேச தொடரில் 8 போட்டிகளில் 58 ரன்களை எடுக்கும் பட்சத்தில், சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை விராட் கோலி முறியடிப்பார்.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு எதிரான, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சென்னையில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடரின் மூலம் விராட் கோலி இந்த வருடம் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்க உள்ளார்.
இந்நிலையில் வங்கதேச தொடரில் விராட் கோலி இன்னும் 58 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைப்பார். கடந்த 2008 முதல் விளையாடி வரும் விராட் கோலி இதுவரை 113 டெஸ்ட், 295 ஒருநாள், 125 டி20 போட்டிகளில் 591 இன்னிங்ஸில் மொத்தம் 26942 ரன்கள் குவித்துள்ளார்.
147 ஆண்டுகள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக குறைந்த போட்டிகளில்(623) 27,000 சர்வதேச ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். இந்த நிலையில், விராட் கோலி 58 ரன்கள் எடுத்தால் சச்சினின் சாதனை முறியடிக்கப்படும். அடுத்து வரக்கூடிய 8 போட்டிகளில் 58 ரன்களை விராட் கோலி எடுக்கும் பட்சத்தில், கிரிக்கெட் வரலாற்றில் 600 போட்டிகளிலேயே 27,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.
சச்சின் டெண்டுல்கரை தவிர, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் இலங்கையின் சங்ககரா ஆகியோர் சர்வதேச போட்டிகளில் 27,000 ரன்களை கடந்துள்ளார்கள்.