'உறைந்த பனிகளின் நடுவே செல்லும் வந்தே பாரத்' என வைரலாகும் படங்கள் - உண்மை என்ன?
This News Fact Checked by ‘India Today’
பனி படர்ந்த மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் வெள்ளை மற்றும் நீல நிற ரயிலின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பகிர்ந்தவர்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் ரயில் வருகை தரும் காட்சி என்று பகிர்ந்திருந்தனர்.
அந்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த ஒருவர், "இந்த புகைப்படம் சுவிட்சர்லாந்தில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல. இது நமது அழகான இந்தியாவிலிருந்து எடுக்கப்பட்டது. வந்தே பாரத் ரயிலின் பனி மூடிய காஷ்மீர் பள்ளத்தாக்குகள் வழியாக பயணிக்கும் காட்சி உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது" என்று எழுதினார்.
உண்மைச் சரிபார்ப்பு :
வைரலான புகைப்படத்தில் சில முரண்பாடுகளை நாங்கள் கவனித்தோம். மின்சார ரயிலாக இருப்பதால், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உயரமான பாண்டோகிராஃப்கள் உள்ளன , அவை தண்டவாளத்தின் மேல் ஓடும் மின்சார கம்பிகளிலிருந்து மின்சாரம் சேகரிக்கின்றன. இருப்பினும், வைரலான புகைப்படத்தில் பான்டோகிராஃப்கள் காணவில்லை, மேலும் மின்சார கம்பிகள் மேலே செல்லாமல் ரயிலின் ஓரத்தில் ஓடுகின்றன.
வைரல் படத்தின் கீழ் வலது மூலையில் எழுதப்பட்ட "GROK" என்ற வார்த்தையையும் நாங்கள் கவனித்தோம். க்ரோக் என்பது எலோன் மஸ்க் நிறுவிய X தளத்தின் AI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு சாட்போட் ஆகும். சாட்போட் பொதுவாக X பயனர்களால் அதன் வாட்டர்மார்க் கொண்ட படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த புகைப்படம் Grok AI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
வைரலான புகைப்படத்தைத் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தியதில் டிசம்பர் 28, 2024 தேதியிட்ட Facebook இடுகையைக் கண்டோம். அதில் வைரலான புகைப்படமும், பனி நிலப்பரப்பில் ஓடும் ரயில்களின் ஒத்த புகைப்படங்களும் இருந்தன. இந்தப் புகைப்படங்கள் AI-யால் உருவாக்கப்பட்டவை என்று தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹைவ் மாடரேஷன் மற்றும் இஸ் இட் ஏஐ போன்ற பல்வேறு AI கண்டறிதல் கருவிகள் மூலமாகவும் வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்தோம். புகைப்படத்தை உருவாக்க ஜெனரேட்டிவ் AI பயன்படுத்தப்பட்டதற்கான கணிசமான சான்றுகள் இருப்பதாகவும் அவற்றின் முடிவுகள் தெரிவித்தன.
கத்ரா மற்றும் ஸ்ரீநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது , இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயக்கப்படும் முதல் அதிவேக ரயிலாகும். இந்த ரயில் தற்போது சோதனையில் உள்ளது மற்றும் ஜனவரி 20, 2025க்குப் பிறகு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . இது மேம்பட்ட வெப்ப அமைப்புகள் போன்ற கூடுதல் அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, இதனால் இது தீவிர வானிலை நிலைகளில் சீராக இயங்க முடியும்.
முடிவு :
காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் என சமூக ஊடகங்களில் படங்கள் வைரலானது. இதனை உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தியதில் வைரலான புகைப்படம் AI-யால் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது
Note : This story was originally published by ‘India Today’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.