For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எஸ்.ஐ.ஆர் பணிச்சுமையால் கிராம உதவியாளர் தற்கொலை - சீமான் கண்டனம்...!

எஸ்.ஐ.ஆர் பணிச்சுமையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கிராம உதவியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தமிழ் நாடு அரசுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
08:56 PM Nov 21, 2025 IST | Web Editor
எஸ்.ஐ.ஆர் பணிச்சுமையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கிராம உதவியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தமிழ் நாடு அரசுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எஸ் ஐ ஆர் பணிச்சுமையால் கிராம உதவியாளர் தற்கொலை   சீமான் கண்டனம்
Advertisement

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisement

“வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் தாங்க முடியாத கடும் பணிச்சுமையை ஊழியர்கள் மீது வலிந்து திணித்ததால் கும்பகோணத்தில் அங்கன்வாடி ஊழியர் சித்ரா அவர்கள் தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, கனகனந்தலை சேர்ந்த கிராம உதவியாளர் ஜாகிதா பேகம் தற்கொலை செய்து கொண்ட துயரச்செய்தி பெரும் அதிர்ச்சியையும் மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்த தங்கை ஜாகிதா பேகம் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

கடுமையான பணிச்சுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்தப்பணிகளைப் புறக்கணிப்பு செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் விருப்பத்தின்படி வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் இந்தியத்தேர்தல் ஆணையம் அவசரகதியில் அறிவித்துள்ள திருத்தப்பணிகளை கடுமையாக எதிர்ப்பதாக கூறும் திமுக அரசு, கூடுதல் பணிச்சுமையால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி, அப்பணிகளை மேற்கொள்ள இயலாது என அறிவித்துள்ள அரசு ஊழியர்களின் அறப்போராட்டத்தை முடக்கும் விதமாக ஊதியம் தர மறுப்பது எவ்வகையில் நியாயம்? ஒருபுறம் திருத்தப்பணிகளை நிறுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டு, மறுபுறம் தங்கள் கட்சியினர் மூலம் வேக வேகமாக திருத்தப்பணிகளை மேற்கொண்டு திமுக அரசு இரட்டை வேடமிடுகிறது. இதுதான் பாஜகவின் தேர்தல் முறைகேடுகளை திமுக அரசு எதிர்க்கும் முறையா?

மழைக்காலம், விழாக்காலம், கடுமையான பணிச்சுமை, குறைந்த காலக்கெடு, மக்கள் பாதிக்கப்படுவார்கள், தேர்தல் நெருங்கிவிட்டது, படிவங்களை நிரப்புவதில் குழப்பம் என்றெல்லாம் நீதிமன்றத்தில் திமுக அரசு கூறிய காரணங்கள் அனைத்தும் அரசு ஊழியர்களுக்கு பொருந்தாதா? திமுக அரசுக்கு ஒரு நியாயம், அப்பாவி அரசு ஊழியர்களுக்கு வேறு நியாயமா? அரசு ஊழியர்கள் என்ன திமுக அரசின் அடிமைகளா? திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்த குற்றம் குறைகளைத்தானே அரசு ஊழியர்களும் முன்வைக்கின்றனர்? அரசின் கொள்கை நிலைப்பாட்டிற்கு துணைநிற்கும் அரசு ஊழியர்கள் பக்கமுள்ள நியாயங்களை நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி, அவர்களின் அறப்போராட்டத்திற்கு துணைநிற்க வேண்டிய திமுக அரசு, அதற்கு மாறாக போராடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லையென்று தண்டிப்பது எவ்வகையில் நியாயம்? இதுதான் அரசு ஊழியர்களின் உரிமையை திமுக அரசு பாதுகாக்கும் முறையா? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? வெட்கக்கேடு.

வாக்காளர்ப் பட்டியல் சிறப்புத் திருத்த கடும் பணிச்சுமையாலும், ஆபாச வசைமொழிகளாலும் கும்பகோணத்தில் அங்கன்வாடி ஊழியர் சித்ரா அவர்கள் தூக்க மாத்திரை உள்ளிட்ட பல்வேறு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற செய்தி வெளிவந்த பிறகாவது திமுக அரசு, வாக்காளர் திருத்தப்பணியை மேற்கொள்ள கட்டாயப்படுத்துவதை கைவிட்டு, விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள் மேற்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தால் அநியாயமாக ஓர் உயிர் பறிபோயிருக்காது? இரண்டு குழந்தைகளை உடைய தங்கை ஜாகிதா பேகம் மரணத்திற்கு திமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். திருத்தப் பணியை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தர மறுப்பதன் மூலம், இருமடங்கு கூடுதல் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இன்னும் எத்தனை அரசு ஊழியர்கள் உயிரிழக்க திமுக அரசு காரணமாகப்போகிறது? ஆட்சியாளர்களின் அதிகாரப்பசிக்கு அப்பாவி அரசு ஊழியர்களை பலிகொடுப்பது கொடுங்கோன்மையாகும்.

ஆகவே, வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்த கடும் பணிகளைப் புறக்கணிக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை நிறுத்தும் முடிவை கைவிட்டு, விருப்பம் உள்ளவர்கள் பணிபுரியலாம் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மேலும், பாஜக அரசு செயல்படுத்த முனையும் வாக்காளர் பட்டியல் முறைகேடுகளுக்கு மறைமுகமாக துணைபோவதை இனியேனும் திமுக அரசு கைவிட்டு, அரசு ஊழியர்கள் பக்கமுள்ள நியாயங்களை நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி அவசரகதியில் நடைபெறும் திருத்தப்பணிகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். உயிரிழந்த தங்கை ஜாகிதா பேகத்தின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement