விஜய் வருகை - தவெகவினர் மீது 2 வழக்குகள் பதிவு!
தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு கோவையில் நேற்று (ஏப். 26) நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக இரண்டு நாட்கள் பயணமாக விஜய் நேற்று 11 மணி அளவில் தனி விமான மூலம் கோவை வந்தடைந்தார்.
கோவை வந்த விஜய்யை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் குவிந்தனர். 50 பேருக்கு மட்டுமே அனுமதி எனவும் பயணிகளுக்கு இடையூறு அளிக்க வேண்டாம் எனவும் போலீசார் அறுவுறுத்தினர். இருப்பினும் விமான நிலையத்தில் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
இந்நிலையில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவெக மாவட்டச் செயலாளர் சம்பத் உள்ளிட்டோர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு இல்லாமல் மக்களை திரட்டி விமான நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறு, பொருள்கள் சேதம் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் கோவை விமான நிலைய சாலையில் இருந்து அவிநாசி சாலையில் இருக்கக் கூடிய தனியார் ஹோட்டல் வரை சாலை மார்க்கமாக சென்றபோது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கார், இரண்டு சக்கர வாகனங்கள் உட்பட 133 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.