புதுச்சேரியில் இன்று விஜய்யின் தவெக மக்கள் சந்திப்பு கூட்டம்!
புதுச்சேரி துறைமுக மைதானத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி கூட்டம் நடைபெறும் இடத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்துக்கு பாஸ் உள்ளவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்பதால், அதிகளவில் கூட்டம் கூடாத வகையில், கியூஆர் கோடுகளுடன் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் தொண்டர்கள் கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்டத்தில் நுழைய முயன்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும் தவெகவினருக்கும் இடையில் லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த தொண்டர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில் பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. புதுவையில் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.