விஜய் வருகை - கோவை விமான நிலையத்தில் குவிந்த தவெக தொண்டர்கள்!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை விஜய் நடத்த உள்ளார்.
அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத் தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதில் ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கு இன்றும், கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான கருத்தரங்கு நாளையும் மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கோவையில் முகாமிட்டு செய்து வருகிறார்.
கருத்தரங்கில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவரும். நடிகருமான விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வருகிறார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த முகவர்கள் கூட்டத்தில் 7 மாவட்டத்தை சேர்ந்த 16 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாக்குசாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் கோவை வரவுள்ள விஜய்யை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் குவிந்துள்ளனர். அவர்களை ஒலிபெருக்கி மூலம் கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். 50 பேருக்கு மட்டுமே அனுமதி எனவும் பயணிகளுக்கு இடையூறு அளிக்க வேண்டாம் என அறுவுறுத்தினர். இருப்பினும் விமான நிலையத்தில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.