For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஜயகாந்த் இறுதிச்சடங்கு! குறையேதும் இல்லாது நடத்தி முடித்ததில் முதலமைச்சரின் பங்கு! - அரசு தரப்பில் விளக்கம்!

07:04 PM Dec 29, 2023 IST | Web Editor
விஜயகாந்த் இறுதிச்சடங்கு  குறையேதும் இல்லாது நடத்தி முடித்ததில் முதலமைச்சரின் பங்கு    அரசு தரப்பில் விளக்கம்
Advertisement

தேமுதிக கட்சித் தலைவர் மறைந்த விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், விஜயகாந்தின் இறப்பு செய்தி கேட்டதிலிருந்து அவரது இறுதிச்சடங்கு நடந்த து வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இது தொடர்பாக,  தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜய்காந்த் நேற்று (28.12.2023) அதிகாலை 5.30 மணியளவில் இயற்கை எய்திய செய்தி கேட்டவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மிகுந்த வேதனை அடைந்தார்.  உடனடியாக விஜய்காந்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி அவருடைய துணைவியாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

தமிழ் உணர்வும்,  தாராள மனமும் கொண்ட உன்னத மனிதர் கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படுகின்ற என்னுடைய அன்பு நண்பர் விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டுக்கும், திரையுலகிற்கும் பேரிழப்பாகும் என்று இரங்கல் செய்தியில் முதலமைச்சர் ஆழ்ந்த வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்.  அத்துடன் மறைந்த விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அறிவித்தார்.

விஜயகாந்தின் உடல்,  கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.  அங்கு ஏற்பட்ட இடநெரிசலைக் கருத்தில் கொண்டு,  அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டபடி,  சென்னை தீவுத்திடலில் அவர் உடலை கொண்டு வந்து வைத்து,  பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் தேவையான வசதிகள் அனைத்தையும் செய்து தந்தார்.

முதலமைச்சர்,  முன்னதாக மாநகராட்சி ஆணையரை தீவுத்திடலுக்கு அனுப்பி, விஜயகாந்த் உடல் வைக்கப்படுவதற்கான இடத்தை தூய்மை செய்து,  தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தியதன் பேரில்,  மாநகராட்சி ஆணையர் உடனடியாக நேரில் சென்று வேண்டிய வசதிகளைச் செய்து தந்தார்.

திரையுலக கலைஞர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள்,  அவரது உறவினர்கள் அனைவரும் சிரமமின்றி வந்து விஜயகாந்துக்கு மரியாதை செலுத்துவதற்கு போதிய பாதுகாப்பு வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்குமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கும்,  சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.  அந்த அடிப்படையில், காவல்துறை சார்பில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.  அத்துடன்,  தீவுத்திடலிருந்து அவரது உடலை எடுத்துச் செல்வதற்கு தேவையான வாகன வசதிகளையும் முதலமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்து தந்துள்ளார்.

தீவுத்திடலிலிருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லும் வழி முழுவதும் காவல் துறையின் முழு பாதுகாப்பு அளிக்கவும் முதலமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்து தந்துள்ளார்.

கருணாநிதி மறைந்த பொழுது,  அண்ணா நினைவிடம் அருகில், அவரை அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஏற்பட்ட இடையூறுகளை நினைவில்கொண்டு,  விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்வதற்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அரசு மூலம் உரிய நடவடிக்கை எடுத்து,  மாநகராட்சி ஆணையரால் உரிய அனுமதிகள் வழங்கிட முதலமைச்சர் ஆவன செய்தார்.

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு முதலமைச்சர் நேரில் சென்று இறுதி மரியாதையை செலுத்தினார்.  கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் பொழுது தமிழ்நாடு அரசின் சார்பில் காவல்துறையின் அணிவகுப்புடன் அவருக்கு 72 குண்டுகள் முழங்கிட முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

விஜயகாந்தின் மறைவுச் செய்தி கேட்டது முதல் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரை,  அவர் ஒரு மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர் என்ற எண்ணம் இல்லாமல், ஒரு சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள் போல,  குறையேதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்னும் அக்கறையுடன் முதலமைச்சர் எடுத்துக் கொண்ட முயற்சிகளை அனைவரும் பாராட்டுகின்றனர்.

இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement