“அதிக இஸ்லாமிய வேட்பாளர்களை அறிவித்தவர் விஜயகாந்த்” - பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக சார்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், இஸ்லாமிய மக்களோடு இணைந்து நோன்பு திறந்தனர்.
நோன்பு திறந்த இஸ்லாமிய மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு நோன்பு கஞ்சி,
பேரிச்சம்பழம், குளிர்பானம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,
“ஆண்டுதோறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தலைமை அலுவலகத்தில்
நடைபெறும். கடந்த ஆண்டு விஜயகாந்தின் மறைவினால் இஃப்தார் நிகழச்சி நடைபெறவில்லை. ரமலான் என்பது ஒரு புனிதமான மாதம். எல்லா மதத்தையும் சமமாக பாவித்து வளர்ந்தோம் நாங்கள். விஜயகாந்தின் வீட்டில் முதலில் விளக்கு ஏற்றும் போது குரானும் இருந்தது, பைபிளும் இருந்தது, பகவத் கீதையும் இருந்தது.
என்னுடைய முதல் மகனுக்கு தமிழ்ப் பற்றினால் பிரபாகரன் என்று பெயர் வைத்தார் விஜயகாந்த். இரண்டாவது மகனுக்கு சௌக்கத் அலி என்று இஸ்லாம் பெயரை தான் சூட்டுவேன் என்று சொன்னார். விஜயகாந்த் நட்பு வட்டாரத்தில் இஸ்லாமியர்கள்தான் அதிகம்.
இன்று மன்சூர் அலிகான் உட்பட பல பல்வேறு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியவர் விஜயகாந்த். அதிக இஸ்லாமிய வேட்பாளர்களை கேப்டன் வேட்பாளர்களாக அறிவித்துள்ளார். விஜயகாந்த் பிறந்தநாள் என்றாலே கோயில் சர்ச், தர்கா, வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வழிபடுவார். தினம் தோறும் ஈசா அல்லா என்று சொல்லிதான் நாளை தொடங்குவார்.
மதங்கள் பெயர்தான் வேறு ஆனால் எல்லாமே ஒன்று தான். உருவமாக விஜயகாந்த் இல்லை, ஆனால் நினைவுகளில் நம்முடன் இருக்கிறார். இந்த இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கூட விஜயகாந்த் ஆன்மா நம்முடன் தான்
இருக்கிறது. அவர் பேரிச்சை பழத்தை விரும்பி உண்பார். பின்னர் கஞ்சியை உண்பார். இப்போது அவர் நியாபகம்தான் வருகிறது.
நல்ல காலம் வரும் போது விஜயகாந்த் இஸ்லாமியர்களுக்கு செய்ய நினைத்ததை செய்வோம். 31 ஆம் தேதி ரம்ஜானுக்காக நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார்.