கரூர் சம்பவத்தை விசாரிக்க பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு தமிழ்நாடு வருகை!
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரிக்க பாஜக குழு அமைத்துள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆலோசனைபடி 8 பேர் கொண்ட பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஹேமமாலினி எம்.பி. தலைமையிலான இந்த குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி,ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு இன்று தமிழகம் வந்துள்ளது. கோவை விமான நிலையம் வந்த பாஜக எம்.பி.க்கள் குழு செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அனுராக் தாகூர் பேசுகையில், "நேரம் கிடைப்பதை பொறுத்து பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டு உள்ளோம்.
இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து எம்.பி வந்துள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் இப்படி துயர சம்பவம் நடந்தது இல்லை. பாதிக்கப்பட்டவர்களின் உடன் இருப்பதாக தான் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது. 8 பேர் கொண்ட குழு உடனடியாக மக்களை சந்திக்க கரூர் வந்துள்ளோம். கரூர் நிலவரம் குறித்து விசாரணையில் தான் முடிவு தெரிய வரும்.
மக்களோடு இருக்க வந்துள்ளோம். எத்தனை நாள் என்பது முக்கியமில்லை. அவர்களுடன் இருக்கோம் என்ற நம்பிக்கையை கொடுப்பதற்காக வந்திருக்கிறோம். அங்கே கள ஆய்வு செய்து மக்களுடன் கலந்துரையாட விசாரணை மேற்கொண்டு இந்த பிரச்சனைக்கு என்ன காரணம் என்பது தொடர்பாக எங்களது தலைமைக்கு சொல்வோம் என்று தெரிவித்துள்ளார்.