விஜய் அதிரடி... வக்ஃபு சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
வக்ஃபு வாரிய சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து திருத்தப்பட்ட வக்ஃபு மசோதா சட்டமாக மாறியது. தொடர்ந்து திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய சட்டம் ஏப்.8 ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்ததாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டது. இந்த வக்ஃபு சட்டத் திருத்தத்தை எதிர்த்து காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வக்ஃப் திருத்த சட்டம் 2025ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மற்ற மாநிலங்களைவிடவும் தமிழ்நாட்டில் பாஜகவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அப்போதிலிருந்தே தவெக தலைவர் விஜய்யும் வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.