கட்சி தொடங்கிய விஜய்! அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்து என்ன?
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நிலையில், அதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
"விஐய்யின் மக்கள் பணி சிறக்கட்டும்; புதிய கட்சியை தொடங்கியதற்கு எனது பாராட்டு; இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை தொடங்க உரிமையுள்ளது."
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை
"தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜயை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்."
விசிக தலைவர் திருமாவளவன்
"யாரும் எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம். அதுதான் ஜனநாயகம், அந்த வகையில் நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; இதனை நாங்கள் வரவேற்கிறோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளர்."
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
"ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியல் என்பது பெருங்கடல் அதில் நீந்தி கரை சேர்பவர்களும் உண்டு, மூழ்கி போகிறவர்களும் உண்டு விஜய் கரை சேர்கிறாரா, மூழ்கி போகிறாரா என்று பார்க்கலாம்.
அவரின் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பது போல் ஊழல் நிறைந்த கட்சி திமுக, மதவாத கட்சி பாஜக நாங்கள் இல்லை.குறிப்பிட்டு எங்களை சொல்லாத வரை நாங்கள் கருத்து சொல்ல வேண்டியதில்லை. யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக ஓட்டுக்ககளை யாரும் கை வைக்க முடியாது. புதிய வாக்காளர்கள் எங்களுக்கு தான் வாக்களிப்பார்கள் என்று ஜெயக்குமார் தெரிவித்தார் ."
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்
"விஜய் அரசியலுக்கு வருவதை தட்டிக்கொடுக்கதான் வேண்டும். கட்சித் தொடங்குவது எளிது, தொடர்வது ரொம்ப கடினம். தொடங்கும் போது இருக்கும் ஆர்வமும், ஈடுபாடும் கடைசிவரை இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். அதற்கு விஜய் விதிவிலக்கல்ல."