கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்ததிற்கு அரசாங்கம் தான் பொறுப்பு - எடப்பாடி பழனிசாமி பேச்சு..!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் தமிநாடு முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்னும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று அவர், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே பரப்புரை மேற்கொண்டார் அப்போது அவர் கரூரில் நடந்த சம்பவத்திற்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி பரப்புரையை ஆரம்பித்தார். அவர் பேசியது,
” கரூரில் நடைபெற்ற சம்பவத்தில், ஆட்சியாளர்கள் முறையாக பாதுகாப்பு கொடுத்திருந்தால், 41 உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். 41 பேர் உயிரிழப்பிற்கு அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். 41 பேர் இறந்ததற்கு காரணம் திமுக தான். முதலமைச்சர் கையில் தான் காவல் துறை இருக்கிறது. அவர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தால், இந்த உயிர்களை பாதுகாத்திருக்கலாம்.
ஒரு நபர் ஆணைய விசாரணை இருப்பதால், பேசமுடியாது. ஒரு நபர் கமிஷன் அமைத்த பிறகு அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு நடத்துவது, கமிஷனை அவமதிப்பது ஆகும். இதற்கெல்லாம் அதிமுக ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி இருக்கும்போது, ஏடிஎஸ்பி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முதலமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும். கரூர் முன்னாள் அமைச்சர் ஒருவர் கண்ணில் பயம் தெரிகிறது.அவர் பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிடலாம்னு நினைக்கிறார். அது நடக்காது. மக்களை இனி ஏமாற்ற முடியாது. இவ்வளவு பெரிய பிரச்சினை நடந்தும், நாட்டின் துணை முதலமைச்சர் எங்கே போனார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை பற்றி கவனிக்காமல் சென்றுள்ளார். கருணாநிதி குடும்பத்தில் இதை நாம் எதிபார்க்க முடியாது.
அரசியல் கட்சி கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. இனி வருங்காலங்களில் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஆனால் ஆளே இல்லாத இடத்தில் ஆளுங்கட்சி கூட்டத்திற்கு காவல் துறை பாதுகாப்பை குவிக்கின்றனர். இதற்கெல்லாம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பதில் கொடுப்பார்கள். கூட்டணி கட்சிகள் ஜால்ரா போடுகின்றன. திருமாவளவன் மனசாட்சியுடன் பேச வேண்டும். மது ஒழிப்பு மாநாடு நடத்த அனுமதி கொடுக்காமல் எப்படி அலைக்கழித்தார்கள் என்று நீங்களே பேசுனீர்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இதே நிலைமை தான்.
திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுக்கு பிறகு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ வெளியில் வந்தது. அதில் உதயநிதி, சபரீசன் ஆகியோர் 30 ஆயிரம் கோடி ரூபாய் கையில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியது. இதற்கு முதலமைச்சர் இன்றும் பதில் சொல்லவில்லை. இரண்டு ஆண்டிலேயே இவ்வளவு என்றால், நான்கரை ஆண்டில் எவ்வளவு இருக்கும்” என்று பேசினார்.