“விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும்” - அண்ணாமலை!
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக ஏகானாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில் இன்று(ஜன.20) பரந்தூர் சென்ற தவெக தலைவர் விஜய், போராட்டக்காரர்களு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர், விமான நிலையத்திற்காக ஆய்வு செய்யப்பட்ட நிலத்தை மறு ஆய்வு செய்ய வேண்டுமென மத்திய மற்றும் மாநில அரசாங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றும், விவசாய நிலங்கள் அல்லாத பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களை பார்த்து விமான நிலையத்தை கொண்டு வாருங்கள் என்றும் கோரிக்கை வைத்ததோடு வளர்ச்சிதான் மக்களின் முன்னேற்றம். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு, மக்களை மிகவும் பாதிக்கும் என பல்வேறு கருத்துகளை பேசியிருந்தார்.
இந்த நிலையில் விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணமலை பேசியுள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “மற்ற மாநில விமான நிலையங்களுடன் ஒப்பிடுகையில் சென்னை விமானம் நிலையம் 1000 ஏக்கரில் குறுகிய பரப்பளவை கொண்டது. சென்னை விமான நிலையத்தில் அதிகமான பயணிகள் பயணிப்பதால் புதிய விமான நிலையம் கண்டிப்பாக தேவை. பரந்தூர் விமான நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்தது மாநில அரசின் முடிவு.
அதனால் விஜய் எந்த ஆலோசனையாக இருந்தாலும் அதை மாநில அரசிடம்தான் கூற வேண்டும். தமிழ்நாட்டுக்கு அதிக விமான நிலையங்கள் தேவை. பரந்தூர் மக்களின் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் அதே வேளையில், அதற்கான மாற்று இடத்தை அவர் கூற வேண்டும்” என்றார்.