5ம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டார் தவெக தலைவர் #Vijay!
நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் விஜய் பேசியது அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு கட்சி வேலைகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜன.25ஆம் தேதி நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதல் 19 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, 2,3,4 என அடுத்தடுத்த மாவட்ட செயலாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட்டார்.
இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், “இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம், வாகைப் பூ மாலை சூடுவோம்… வெற்றி நிச்சயம்” என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்துக்கொண்டு, கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து, கட்சியின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர் , வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகியோரது சிலைகளை திறந்துவைத்தார்.
இந்த நிலையில், தவெகவின் 5ம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார். அதன்படி, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கான ஐந்தாம் கட்ட மாவட்ட பொறுப்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.