"விஜய் வாய்ப்பு குறையும்போது பிசினஸாக கட்சியைப் பயன்படுத்தப் பார்க்கிறார்!" - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆவேசம்!
சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
“ஒரு அரசியல்வாதி என்றால் மேடை நாகரிகம் வேண்டும். அது இல்லாமல் பேசுவது சரியல்ல. நடிகர் விஜய் ஒரு நடிகராக இருந்தவர். தன்னுடைய தொழில் வாழ்க்கையில், நடிப்புக்கான வாய்ப்புகள் குறையும்போது, அடுத்த கட்ட வியாபாரமாக (Business) கட்சியைப் பயன்படுத்தப் பார்க்கிறார்” என்று அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், "அரசியல் என்பது ஒரு நாள் இரவில் வந்துவிடக்கூடியது அல்ல. கொள்கை, தியாகம், உழைப்பு என ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கஷ்டப்பட்டு திமுக இந்த நிலைக்கு வந்துள்ளது. ஒரு திரைப்படத்தில் நடித்ததைப் போல, திடீரென்று அரசியலுக்கு வந்து ஆட்சிக்கு வரலாம் என நினைப்பது சினிமா செட்டிங் போல் உள்ளது" என்று குறிப்பிட்டார்.
அமைச்சர் பன்னீர்செல்வத்தின் இந்த விமர்சனம், அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய மாநாடு மற்றும் அதில் விஜய் பேசிய பேச்சுக்களுக்கு ஒரு நேரடி பதிலடியாக அமைந்துள்ளது. ஏற்கனவே பல அரசியல் தலைவர்கள், விஜய்யின் அரசியல் நகர்வுகளை விமர்சித்து வரும் நிலையில், ஆளும் கட்சி அமைச்சரின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.