“நீட் தீர்மானத்தை விஜய் ஆதரித்து இருக்கிறார்.. He is on the line..” - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
நீட் தீர்மானம் குறித்த நடவடிக்கைக்கு நடிகர் விஜய் ஆதரவு தெரிவித்திருப்பதை வரவேற்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வு மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய பாஜக அரசு கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ மற்றும் கல்வியாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
கண்டன மேடையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது,
“இந்த ஆர்ப்பாட்டம் இந்தியாவின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்ற குரல் வந்த போது சபாநாயகர் ஒப்புக்கொண்டார். ஆனால் நரேந்திர மோடி பயந்து கொண்டு பதில் சொல்ல எதுவும் காரணம் இல்லாததால் இன்று முடிய இருந்த நாடாளுமன்றத்தை நேற்று முடித்து வைத்திருக்கிறார். இது திமுகவிற்கு கிடைத்த வெற்றி.
நீட் தேர்வை இன்று, நேற்று அல்ல எப்போது அறிமுகப்படுத்தினார்களோ அன்றிலிருந்து எதிர்க்கும் இயக்கம் திமுக. கருணாநிதி இருக்கும் வரை தமிழ்நாட்டில் நீட் நுழையவில்லை. ஜெயலலிதா இருக்கும் வரையும் கூட நீட் தேர்வு நுழையவில்லை. ராகுல் காந்தி இந்த நீட் தேர்வை கையில் எடுத்துக் கொண்டதை நான் மனமார பாராட்டுகிறேன். நீட் தேர்வு வருவதன் நோக்கமே நம்மை அழிக்க தான். நீட் தேர்வு ஒழுங்காக நடந்ததா? உலகின் அனைத்து முறைகேடுகளும் நீட் தேர்வில் தான் நடத்துள்ளது. ஒரு நல்ல காலம் திரும்பிக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
யாராக இருந்தாலும் இந்த இயக்கத்தோடு போராட வேண்டும் என்ற நிர்பந்தம் வந்துள்ளது. நேற்று கட்சி ஆரம்பித்த விஜய்யாக இருந்தாலும் இதை ஆதரிக்கின்றனர். மக்களுக்கான ஆதரவு யார் கொடுத்தாலும் அதை வரவேற்பவர் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சனாதனத்தை உதயநிதி ஸ்டாலின் பேசிய பிறகு தான் ராகுல் காந்தி பேசினார். நீட் தேர்வை உதயநிதி கையில் எடுத்துள்ளார். வெற்றி விழாவை இந்த இடத்தில் நாம் உதயநிதி ஸ்டாலினுக்கு நடத்துவோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி,
“இந்த தீர்மானத்திற்கு வெற்றி கிடைக்கக்கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. உச்சநீதிமன்றம் இந்த மோசடி ஊழலை பார்த்துக் கொண்டிருக்கிறது. நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். திமுக எடுத்த முடிவு நல்ல முடிவு என்று அனைவரும் இன்று உணர ஆரம்பித்து விட்டனர். ஒரு காலத்தில் திமுக மட்டும் பேசிக் கொண்டிருந்தது இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக பேசி வருகிறது.
இன்று காலையில் தாமாக முன்வந்து நடிகர் விஜய் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். அகில இந்திய அளவில் இந்த பிரச்னை பரவலாகியுள்ளது. ஒரு அரசாங்கமே நீட்டுக்கு எதிராக போராடி வருகிறது. கல்வியையும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற விஜய்யின் கருத்து வரவேற்கத்தக்கது.
ரூ.167 கோடி கடத்தல் தங்கம் சிக்கி உள்ளது. இதில் தொடர்பு உள்ளதாக பிரதமர் மோடி படம் வந்துள்ளது. நிர்மலா சீதாராமன், அண்ணாமலையின் படம் வந்துள்ளது. எடப்பாடி படம் வந்துள்ளது. ஒரே ஒரு சாராய வியாபாரியுடன் படம் இருந்ததற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்த அண்ணாமலை தற்போது ஏன் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்? அப்போது மோடிக்கும் ரூ.167 கோடிக்கும் தொடர்பு உள்ளது என நான் சொல்லட்டுமா?
அண்ணாமலை ரூ.167 கோடி தங்க கடத்தல் விவகாரம் குறித்து முதலில் பதில் சொல்லுங்கள். நடிகர் விஜய் நீட் தீர்மானத்தை ஆதரித்து இருக்கிறார். அவருக்கு நன்றி. He is on the line”
இவ்வாறு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.