அரங்கில் என்ட்ரி கொடுத்த விஜய்... தொடங்கியது தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கு!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை நடத்த விஜய் முடிவு செய்திருந்தார். அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கு கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் கோவையில் தொடங்கியுள்ளது.
ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த தவெக வாக்குச்சாவடி முகவர்களுக்கான இந்த கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கான கருத்தரங்கு நாளை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகிறார்கள்.
முன்னதாக, கருத்தரங்கில் பங்கேற்பதற்காக தவெக தலைவர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வருகை தந்தார். அவருக்கு தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து தவெக தலைவர் விஜய் வாகனத்தில் இருந்து தொண்டர்களை நோக்கி கை அசைத்தவாறு ரோடு ஷோ நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.