விஜய்தேவரகொண்டாவின் குசும்புப் பேச்சு: "அனிருத் ஐ லவ் யூ" - திருமண ரகசியமும் உடைந்தது!
நடிகர் விஜய்தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள "கிங்டம்" திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஜூலை 31 அன்று வெளியாகிறது. இதன் ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஜய்தேவரகொண்டா, தனது பட அனுபவங்கள், இசையமைப்பாளர் அனிருத்துடன் உள்ள நட்பு, திருமணம் பற்றிய யோசனைகள் எனப் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
"கிங்டம்" திரைப்படம் வெறும் சண்டைப் படமல்ல, அது அண்ணன்-தம்பி பாசத்தையும் பேசுகிறது என்றார் விஜய். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது என்பதையும் குறிப்பிட்டார்.
'கீதாகோவிந்தம்', 'குஷி' போன்ற காதல் படங்களில் நடித்தபோது நிறைய ரசிகைகள் கிடைத்ததாகவும், 'என்னை மாதிரி மணமகன் வேண்டும்' என்று பல பெண்கள் நினைத்ததாகவும் நகைச்சுவையாகக் கூறினார். இப்போது ஆக்ஷன் படங்களில் அதிகம் நடிப்பதாகவும், "வயதாகிவிட்டதோ என்னவோ" என்று சிரித்துக்கொண்டே கேட்டார். மேலும் கல்லூரி மற்றும் காதல் கதைகளில் நடிப்பதற்கும் தனக்கு ஆர்வம் இருப்பதாகத் தெரிவித்தார்.
"கிங்டம்" படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத்தும் தானும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டதாகவும், இருவரும் இணைந்து நிறைய நேரம் செலவழித்ததாகவும், ஒன்றாகச் சுற்றியதாகவும், நன்றாகச் சாப்பிட்டதாகவும், இசை கேட்டதாகவும் நெகிழ்ந்து பேசினார். பேச்சின் முடிவில், "ஐ லவ் யூ அனிருத்" என்று தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்தப் படத்தின் டீசருக்கு குரல் கொடுத்த சூர்யாவுக்கு நன்றி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து "கிங்டம்" திரைப்படம் 'கே.ஜி.எஃப்' போன்ற கதை அல்ல, இது ஒரு பக்கா ஆக்ஷன் என்டர்டெயினர் என விஜய் தேவரகொண்டா தெளிவுபடுத்தினார். பல ஆண்டுகால நண்பரான நடிகை ராஷ்மிகா மந்தனா, இந்தப் படத்தின் மீது ஆர்வம் காட்டியதற்கு நன்றி தெரிவித்தார்.
தனக்கு முதலில் திருமணமா அல்லது அனிருத்துக்கு திருமணமா என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் கேட்கப்படுவதாகவும், அனிருத் தன்னை விட வயதில் சிறியவர் என்றும் குறிப்பிட்டார். தனக்கு ஓரிரு ஆண்டுகளில் திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்தார்.
தனது சின்ன வயதில் ஆசிரியர் உட்பட யாரும் தன்னை பாராட்டியது இல்லை என்று குறிப்பிட்ட விஜய்தேவரகொண்டா, இந்தப் படம் முடிந்தவுடன் இயக்குனர் தனது அம்மாவுக்கு போன் செய்து "உன் மகன் நன்றாக நடித்திருக்கிறான்" என்று பாராட்டியதை மறக்கவே முடியாது என்றார். அந்தப் பாராட்டு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும் குறிப்பிட்டார்.