உத்தரகாண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியவர்கள் மீட்க துளையிடும் விடியோ வெளியீடு!!
சுரங்கப் பாதையில் மீட்புப் படையினர், துளையிடும் பணியின் விடியோ வெளியாகியிருக்கிறது.
உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட திடீர் நிலச்சரிவைத் தொடர்ந்து இடிந்தது. இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து 60 மீட்டர் தொலைவுக்கு 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன. குழாயைச் செலுத்துவதற்கு துளையிடப்பட்ட பாதையில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் மீட்புப் பணிகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டன. துளையிடும் 25 டன் எடைக் கொண்ட ஆகர் இயந்திரம் நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் தொடர்வதில் சிக்கல் நிலவியது.
பின்னர் விரிசல் சீர் செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது. இதனால் கிடைமட்டமாக குழாய் செலுத்தும் மீட்புப் பணிகள் முழுவதுமாக முடங்கியது.
மீதமுள்ள 10-12 மீட்டர் தொலைவுக்கு பணியாளர்களே நேரடியாக குழாயைச் செலுத்துவதற்கு இயந்திரத்தின் பிளேடை அகற்றுவது அவசியமாகிறது. இந்தப் பணியை மேற்கொள்ள இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் கட்டுமானப் படைப்பிரிவைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் இருந்து சம்பவ இடத்துக்கு சென்றடைந்தனர்.
ராணுவ வீரர்களால் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆகர் இயந்திரம் பிளாஸ்மா கட்டர் மூலம் முழுமையாக வெட்டப்பட்டுள்ளது. ஆகர் இயந்திரத்தின் முன் பகுதி பைப்லைனில் சிக்கியுள்ளதால் இயந்திரத்தின் முன்பகுதி மற்றும் குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருவதாகவும், குழாயின் கடைசிப் பகுதியின் 2 மீட்டர் பகுதியும் (அதாவது 48 முதல் 50 மீட்டர் வரை) முறுக்கப்பட்டுள்ளதாகவும், குழாயின் 2 மீட்டர் பகுதியை வெட்டி அகற்றுவதும் பெரும் சவாலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சுரங்கப் பாதை மணல் குவியலில் பக்கவாட்டில் தொடர்ந்து துளையிட டெல்லியில் இருந்து 24 சிறப்பு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மெலிந்த தேகம், உயரம் குறைவான இவர்கள் சமதளம், மலைப்பகுதியில் எலிவளை போல குடைந்து சிறியஅளவிலான சுரங்கம் தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள். இதன்காரணமாக ‘எலி வளை' தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இதற்கிடையில் சுரங்கப் பாதையின் மேல் பகுதியில் இருந்து 86 மீட்டருக்கு செங்குத்தாக துளையிடும் பணியில் 36 மீட்டர் ஆழத்துக்கு இதுவரை துளையிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், மீட்புப் படையினர், சுரங்கத்துக்குள் துளையிடும் பணியின் விடியோ வெளியாகியிருக்கிறது.
Can expect the good news soon. Manual drilling with #RatMiner technique is in progress. Out of 57 Mtrs, only the last 5-6 Mtrs is left now to reach to the 41 stranded workers. Let's PRAY for their safe recovery #today. #SilkyaraTunnel pic.twitter.com/htOEfFIB2o
— Shambhavi Patwardhan (@star_shambhavi) November 28, 2023