கேரளாவில் காங்கிரஸ் , முஸ்லீம் லீக் இடையே மோதல் என வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?
This news Fact Checked by ‘IndiaToday’
கண்ணூரில் காங்கிரஸ் - முஸ்லிம் லீக் இடையே மோதல் என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகிறது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
கேரள மாநிலம் வயநாடு இடைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளரும் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார். இதேபோல மகாராஷ்டிரா , ஜார்க்கண்ட் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல் என தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றி தோல்வி குறித்து ஆலோசித்து வருகின்றன. இதற்கிடையில், கண்ணூரில் UDF கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தொண்டர்கள் மோதிக்கொண்டதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
கண்ணூரில் முஸ்லிம் லீக் காங்கிரஸ் சண்டை இது குழந்தைகளின் ஐக்கிய முன்னணி என்ற தலைப்பில் பரவி வரும் முகநூல் பதிவின் முழு வடிவத்தை கீழே காணலாம் . இதுகுறித்து , இந்தியா டுடே நடத்திய விசாரணையில், வைரலாகும் வீடியோ காங்கிரஸ்-முஸ்லிம் லீக் மோதலுடன் தொடர்புடையது அல்ல என்று கண்டறியப்பட்டது.
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ ஆய்வுக்கு உட்படுத்தியதில் அது கண்ணூர் விஷன் என்ற உள்ளூர் சேனலுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இந்தத் தேடலின் அடிப்படையில், வீடியோவின் முழுமையான வடிவம் கிடைத்தது. "தலையில் ரத்தம் சொட்டிய நிலையில் பி.கே.ராகேஷ் - படன்னாவில் மோதல்." தலைப்புடன் பரவும் வீடியோ நவம்பர் 22, 2024 அன்று பகிரப்பட்டது. கண்ணூர் படன்னபாலத்தில் அமிர்த் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பின் போது நடந்த மோதல் இது என்றும், கண்ணூர் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் பி.கே.ராகேஷ் ஆதரவாளர்களுக்கும், முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் பி.கே.ராகேஷ் மற்றும் முஸ்லீம் லீக் தலைவர்கள் டி.பி.வாசில், கே.வி.ஷிஹாப் ஆகியோர் காயமடைந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை கீழே பாருங்கள்.
மேலும் ஆய்வு செய்ததில், மோதலில் பி.கே.ராகேஷ் காயம் அடைந்தது குறித்து தேசாபிமானி ஆன்லைன் வெளியிட்ட செய்தியிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, நவம்பர் 22 வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த மோதல் நடந்துள்ளது. முஸ்லீம் லீக் தாக்குதல்: கண்ணூர் மாநகராட்சி வளர்ச்சிக் குழுத் தலைவர் தலையில் காயம்' என்ற தலைப்பில் தேசாபிமானி வெளியிட்ட செய்தியைப் படிக்கலாம் .
இதன்பின்னர் காயமடைந்த பி.கே.ராகேஷ் குறித்து விசாரித்தோம். மனோரமா ஆன்லைன் வெளியிட்ட அறிக்கையின்படி, காங்கிரஸ் தலைவர் பிகே ராகேஷ் மே 2023 இல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பள்ளிக்குன் சர்வீஸ் கூட்டுறவு வங்கி தேர்தலில் கலகம் செய்ததாக காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து பி.கே.ராகேஷ் உள்ளிட்ட 7 பேர் நீக்கப்பட்டனர். இதனுடன் மேலும் இருவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டை கீழே காணலாம் .
வர்தா மீடியா ஒன் ஆன்லைன் , கேரளா கௌமுதி ஆங்கிலம் மற்றும் சமயம் மலையாளம் ஆகிய பத்திரிகைகளும் காங்கிரஸில் இருந்து பி.கே.ராகேஷ் நீக்கம் தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளன . மேலும் தெளிவுபடுத்துவதற்காக கண்ணூர் டிசிசி தலைவர் மார்ட்டின் ஜார்ஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். "பி.கே. ராகேஷ் காங்கிரஸ் கட்சியில் இல்லை, அவர் 2023ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் . மாநகராட்சி வளர்ச்சி விவகாரங்களுக்கான நிலைக்குழுவில் முஸ்லிம் லீக், பா.ஜ., மற்றும் சி.பி.எம். உறுப்பினர்களும் உள்ளனர். அதனால்தான் அவர் குழுவின் தலைவராக தொடர்கிறார்." என மார்ட்டின் ஜார்ஜ் இந்தியா டுடேவிடம் தெரிவித்தார்.
பி.கே.ராகேஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து மார்ட்டின் ஜார்ஜ் விளக்கமளிக்கும் நேர்காணல் வீடியோ கண்ணூர் விஷன் ஆன்லைன் யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. மே 15, 2023 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோவை கீழே காணலாம்.
காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட பி.கே.ராகேஷின் ஆதரவாளர்களுக்கும், முஸ்லீம் லீக் தொண்டர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் காட்சிதான் காங்கிரஸ்-முஸ்லிம் லீக் மோதல் எனப் பரவி வரும் தகவல்களில் இருந்து தெரிகிறது.
முடிவு :
கண்ணூரில் காங்கிரஸ் - முஸ்லிம் லீக் இடையே மோதல் என வீடியோ வைரலாகிறது. இந்த வீடியோ காங்கிரஸ்-முஸ்லிம் லீக் மோதல் பற்றியது அல்ல. காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட பி.கே.ராகேஷ் ஆதரவாளர்களுக்கும், முஸ்லீம் லீக் தொண்டர்களுக்கும் இடையேயான மோதல் ஆகும். எனவே இந்த கூற்று தவறானது.
Note : This story was originally published by ‘IndiaToday’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.