For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பாஜகவுக்கு 400 சீட்... மனநலம் பாதிக்கப்பட்ட தொண்டர்" என பரவும் வீடியோ உண்மை என்ன?

03:35 PM Jun 01, 2024 IST | Web Editor
 பாஜகவுக்கு 400 சீட்    மனநலம் பாதிக்கப்பட்ட தொண்டர்  என பரவும் வீடியோ உண்மை என்ன
Advertisement

This news fact checked by Fact Crescendo

Advertisement

பாஜக-வுக்கு 400 சீட் கிடைக்கும் என்று கூறி கூறி வட இந்தியாவில் பாஜக ஆதரவாளர் ஒருவருக்கு மனநலமே பாதிக்கப்பட்டுவிட்டது என்று ஒரு வீடியோ செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.  இது தொடர்பாக Fact Crescendo உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வு செய்தது. இது குறித்து விரிவாக காணலாம்.

பாஜகவுக்கு 400 சீட்டு.. பாஜகவுக்கு 400 சீட்டு.. 

இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. இதில் மொத்தம் 485 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனுடன் 18வது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜுன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் பாஜக 400 இடங்களை வெல்லும் என மிகத் தீவிரமாக பரப்புரை செய்தனர். இந்த நிலையில் பாஜக ஆதரவு நபர் ஒருவர் பாஜகவுக்கு 400 சீட்டு.. பாஜகவுக்கு 400 சீட்டு.. என கத்திக்கொண்டே இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் பாஜகவுக்கு 400 சீட்டு.. பாஜகவுக்கு 400 சீட்டு என அவர் அடிக்கடி கூறியதால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக செய்திகள் பரவின.

அவருக்கு மருத்துவர்கள் என்ன ஆனது என்று தெரியாமல் குழம்பிப் போய் மயக்க மருந்து அளிப்பது போலவும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.

உண்மை சரிபார்ப்பு:

வீடியோ எடுக்கப்பட்ட விதத்தைப் பார்க்கும் போதே யாரோ ரீல்ஸ்-க்காக எடுத்த வீடியோ போல் தெரிகிறது. திரைக்கதை எழுதி நடித்த (ஸ்கிரிப்டட்) வீடியோவை உண்மை என்று நம்பி செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதனை Fact Crescendo ஆய்வு செய்தது.

வீடியோ காட்சிகளைப் தனித் தனி ஃபிரேம்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் உள்ளிட்ட பல தேடுதலுக்கு உட்படுத்தியது.  இதன் முடிவாக  எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆப் கி பார் 400, மன நல பாதிப்பு என்பது உள்ளிட்ட சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். இந்த வார்த்தைகளை இந்தியில் மொழிபெயர்த்துத் தேடியதில் ஃபேஸ்புக்கில் வெளியான லைவ் வீடியோ ஒன்று கிடைத்தது.

அதில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டது போன்று நடித்த நபர் இருந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து வருபவது போல் நடித்தவரும் அருகில் இருந்தார். ஆப் கி பார் 400 ரீல் நடித்தவர் என்பது போன்று அந்த வீடியோவின் குறிப்பு பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இது ரீல்ஸ்-ஆக இருக்கலாம் என்ற சந்தேகம் ஓரளவுக்கு உண்மையானது.

வீடியோவில் இந்தியில் பேசியதால், நம்முடைய இந்தி குழுவினரின் உதவியை நாடினோம். அந்த வீடியோவை பார்த்துவிட்டு 400 சீட் கிடைக்கும் என்று கூறி கூறி மனநலம் பாதிக்கப்பட்டதாக வீடியோவில் நடித்தவர் இவர்தான். இந்த வீடியோ எப்படி எடுக்கப்பட்டது என்று அவர் அந்த பேட்டியில் கூறுகிறார். அந்த நபரின் பெயர் டாக்டர் ராஜிந்தர் தாப்பா (Dr Rajinder Thappa) என்றும் இது இரண்டு வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஸ்கிரிப்டட் வீடியோ என்று அவர் கூறியதாகவும் தெரிவித்தனர். மேலும், வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இரண்டாம் பாகம் வெளியிட்டுள்ளதாகவும், அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியிடப்படும் என்று அவர் கூறியதாகவும் தெரிவித்தனர்.

அவர் பெயரைப் பயன்படுத்தி ஃபேஸ்புக்கில் தேடினோம். அப்போது அவரது ஃபேஸ்புக் பக்கம் நமக்கு கிடைத்தது. அதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த மருத்துவர் என்பது தெரியவந்தது. மேலும், இவர் ஸ்கிரிப்ட் செய்து எடுத்து வெளியிட்ட சில வீடியோக்களையும் காண முடிந்தது. 400 சீட் தொடர்பாக அவர் முதலில் வெளியிட்ட வீடியோ மற்றும் அதன் இரண்டாவது பாகம் என அனைத்தையும் காண முடிந்தது. முதலில் வெளியான வீடியோவில் அது ஸ்கிரிப்டட் வீடியோ என்று எந்த குறிப்பும் இல்லாமல் வெளியிட்டிருந்தார். இரண்டாவது பாகத்தில் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக எடுக்கப்பட்டது என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஆம் ஆத்மி கட்சி தொப்பி அணிந்து இவர் வெளியிட்டிருந்த வீடியோவையும் காண முடிந்தது. தொடர்ந்து தேடுதலில் காஷ்மீரில் வேறு சில ஊடகங்களுக்கும் அவர்கள் அளித்த பேட்டி கிடைத்தது. இதன் முடிவில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ உண்மையில்லை என்பதை உறுதி செய்கின்றன.

முடிவு:

பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் என்று கூறிய பாஜக தொண்டர் ஒருவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டது என்று பரவும் வீடியோ திரைக்கதை எழுதி எடுக்கப்பட்ட நாடக வீடியோ என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே,  இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Note : This story was originally published by Fact Crescendo and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement