டெல்லி சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி!
டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பெரும்பான்மையை நிருபித்து வெற்றி பெற்றுள்ளார்.
தலைநகர் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் எழுந்த புகார் மீதான விசாரணையில் கலால் துறை அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்திருந்தது. ஆனால், சம்மனை வாங்க மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு எதிராக சம்மன் அனுப்புவது சட்டவிரோதம் என தெரிவித்து சம்மனை திருப்பி அனுப்பினார்.
இதனிடையே, டெல்லி சட்டசபையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை இன்று கொண்டு வந்து பேசினார். அதைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு ஆதரவாக 54 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் எதிர்த்து வாக்களித்தார். எனவே அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆம் ஆத்மியைச் சேர்ந்த 2 பேர் சிறையிலும், மீதமுள்ளோர் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது.