’செப்டம்பர் 9ல் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல்’ - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
இந்திய குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், மருத்துவக் காரணங்களுக்காக செய்வதாக கடந்த ஜூலை 21 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையமானது ஜூலை 23ஆம் தேதியில் புதிய துணைக் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் அதிகாரபூர்வமாக தொடங்கியதாக அறிவித்தது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் தொடர்பான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது என்றும் தேர்தலுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையமானது துணைக் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான கால ஆட்டவணையை இன்று (01.08.2025) வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,
தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 என்றும் தெரிவித்துள்ளது. மேலும் வேட்புமனு பரிசீலனைக்கான கடைசி தேதி ஆகஸ்ட் 22 என்றும், வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 25 என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இருந்தால் செப்டம்பர் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.அதே தேதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
ஜெகதீப் தன்கரின் பதவிக் காலம் 2027 வரை இருக்கும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, புதிதாக குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.பரபரப்பான அரசியல் சூழலில் துணைக் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான கால ஆட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.