குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!
நாட்டின் 17 வது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாநிலங்களவை செயலாளர் P.C.மோடியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பிரதமர்மோடி, நாடாளுமன்ற குழு தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.பி-க்கள் என பலரும் கையொப்பமிட்ட வேட்பு மனுவை சி.பி ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜே.பி நட்டா, நிதின் கட்காரி, கிரண் ரிஜிஜு உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் சிராக் பசுவான், குமாரசுவாமி உள்ளிட்ட கட்சியை சார்ந்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் வருகை தந்த சி.பி ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் மற்றும் மகாத்மா காந்தி உள்ளிட்டோரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.