துணை வேந்தர் நியமன விவகாரம் - கேரள ஆளுநர் உச்சநீதிமன்றத்தில் மனு!
கேரளாவில் உள்ள இரு பல்கலைகழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் கேரள முதல்வர் மற்றும் ஆளுநருக்கு இடையே பிரச்சனை நீடித்து வந்தது. இந்த விவகாரம தொடர்பாக கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரள ஆளுநர் ராஜேந்தர் ஆர்லேகர் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் முதல்வரின் தலையீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரின் மனுவில்,
கேரளாவில் உள்ள கேரளா டிஜிட்டல் பல்கலைக்கழகம் மற்றும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் கேரள மாநில முதல்வரின் தலையிடு உள்ளது. அவ்வாறு தலையிடுவது என்பது பல்கலைக்கழக மானிய குழுவின் நெறிமுறைகளின் கீழ் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தனக்கு எதிரான வழக்கை அவரே விசாரித்து தீர்ப்பு வழங்குவது போல பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் கேரள மாநில முதல்வரின் தலையீடு இருக்கிறது.
கேரளாவில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். துணைவேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு குழுவில் கேரளா அரசு மற்றும் வேந்தர் ஆகியோர் பரிந்துரைக்கும் நபர்கள் இடம்பெறலாம் என்ற அந்த உத்தரவின் காரணமாக கேரளா அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் போக்கு உருவாகி இருக்கிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் மாநில அமைச்சரவையின் அறிவுரைகளின் படி ஆளுநர் செயல்பட வேண்டியதில்லை. எனவே இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.