பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் காலமானார்!
பாலிவுட் திரைத்துறையில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் மனோஜ் குமார் (87) . இவர் இயக்குநர், தயாரிப்பாளர் , எழுத்தாளர் உள்ளிட்ட பன்முகங்களை கொண்டவர். தேசபற்றுமிக்க படங்களில் அதிகமாக நடித்ததால் 'பாரத் குமார்' என்றும் இவர் அழைக்கப்பட்டார். இவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். இவரின் 'புரப் அவுர் பஸ்சிம்' படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இவர், யாத்கார், பெஹ்சான், மேரா நாம் ஜோக்கர் உள்ளிட்ட சிறந்த படங்களை கொடுத்துள்ளார். இவர் கடந்த 1992-ல் பத்மஸ்ரீ விருதையும், 2015-ல் இந்திய சினிமா துறையில் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றார். இதற்கிடையே, இவர் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி உடல்நல குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை 4.03 மணியளவில் மனோஜ் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யார் இந்த மனோஜ் குமார்?
மனோஜ் குமார் கடந்த 1937 ம் ஆண்டு ஜூலை 24 அன்று தற்போது பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் அபோதாபாத்தில் பிறந்தார். மனோஜுக்கு பத்து வயதாக இருந்தபோது, அவரது குடும்பம் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தது. டெல்லி இந்து கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு திரைப்படத் துறையில் நுழைந்தார். கடந்த 1957 இல் வெளியான 'ஃபேஷன்' படத்தின் மூலம் சினிமா துறையில் நடிகராக அறிமுகமானார்.
1960 இல் வெளியான 'காஞ்ச் கி குடியா' திரைப்படம் இவருக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது. பின்னர் 1964 ஆம் ஆண்டு வெளியான 'ஷாஹீத்' திரைப்படம் அவருக்கு ஒரு தேசபக்தி நாயகனின் பிம்பத்தைக் கொடுத்தது. இந்தப் படம் பகத்சிங்கின் வாழ்க்கை மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டது. மனோஜ் குமார் கடந்த 1967 ஆம் ஆண்டு இயக்குநராக அவதாரம் எடுத்தார். மனோஜ் குமார் இயக்கிய முதல் படம் 'உப்கார்'.