For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வேங்கைவயல் விவகாரம்: உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

03:32 PM Jan 29, 2024 IST | Web Editor
வேங்கைவயல் விவகாரம்  உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
Advertisement

வேங்கைவயலில் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிடக் கோரி சிபிசிஐடி அளித்த மனு மீதான விசாரணை பிப். 12-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு பஞ்சாயத்து இறையூர் அருகே உள்ள வேங்கைவயல் ஆதிதிராவிடர் காலனியில்,  25-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில்,  அங்குள்ள சிறுவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  தொடர்ந்து ஒவ்வொருவராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து,  அவர்கள் பயன்படுத்தும் குடிநீரில் ஏதோ கலந்திருப்பதாக, சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி பார்த்தனர்.  அப்போது அதில் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருக்கும்,  ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் அளித்தனர்.  அதன்பேரில்,  அன்னவாசல் வட்டாட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உடனடியாக அங்கு சென்று,  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஆய்வு மேற்கொண்டனர்.

மலம் கலந்திருப்பதை உறுதி செய்த அதிகாரிகள்,  தொட்டியில் உள்ள நீரை அப்புறப்படுத்தி,  கிருமிநாசினிகள் கொண்டு தூய்மைப்படுத்தினர்.  மேலும் மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.  இதையடுத்து,  தங்களை யாரோ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தாங்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலத்தை கலந்து சென்றுள்ளதாக தெரிவித்த அப்பகுதி மக்கள்,  குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையும் படியுங்கள்: இறுதிக்கட்டத்தை எட்டிய விடாமுயற்சி படப்பிடிப்பு! ரிலீஸ் எப்போது?

இச்சம்பவம் நிகழ்ந்து ஓராண்டை கடந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இருப்பினும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.  நீதிமன்ற உத்தரவின்படி இதுவரை 5 சிறார்கள் உட்பட 31 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனைக்கான இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.  ஆனால்,  31 பேரின் டிஎன்ஏ மாதிரிகளும் ஒத்துப்போகவில்லை என தகவல் வெளியாகியது.

இதனைத் தொடர்ந்து 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி முடிவு செய்தனர்.  இதற்கான மனு புதுக்கோட்டை மாவட்ட எஸ்சிஎஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது.  அண்மையில் ஒத்திவைக்கப்பட்ட இம்மனு இன்று (ஜன.29) மீண்டும் விசாரணைக்கு வந்தது.  இந்த நிலையில் விசாரணையை பிப். 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எஸ். ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Advertisement