For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வேங்கைவயல் விவகாரம்: 3 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி!

02:50 PM Apr 16, 2024 IST | Web Editor
வேங்கைவயல் விவகாரம்  3 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி
Advertisement

வேங்கைவயல்  விவகாரம் தொடர்பான வழக்கில் 3 மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும் என காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

புதுக்கோட்டை அருகே  வேங்கை வயல் கிராமத்தில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.  இது தொடர்பாக வெள்ளனூர் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.  இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வந்தது.  பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.  இந்த வழக்கில் இதுவரை 159 நபர்களிடம் விசாரிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஐந்து சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனையும் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டனர்.

இதையும் படியுங்கள் : ரூ.200 கோடி சொத்தை தானம் கொடுத்துவிட்டு துறவறம் பூண்ட குஜராத் தம்பதி!

இது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.  மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ராஜ்கமல் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்,  இந்த வழக்கில் மாநில அரசு தீவிரம் காட்டாததால்,  கிராம மக்கள்,  மக்களவை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 3 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்படும் என காவல்துறை தெரிவித்திருப்பதாக கூறினார்.  இதனையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags :
Advertisement