"மரியே வாழ்க.." முழக்கத்துடன் கோலாகலமாக நடைபெற்றது #Velankanni ஆலய தேர்பவனி!
வேளாங்கண்ணி புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலய 4ம் நாள் தேர் பவனி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இவ்விழா நடைபெறும் 10 நாட்களிலும் தினந்தோறும் தேர் பவனி நடைபெறும். அதன்படி, 4ம் நாள் திருவிழாவான நேற்று தேர்பவனி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அந்த வகையில், புனித ஆரோக்கிய மாதா, மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர் ஆகியோர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த தேர் கடற்கரை சாலை ஆரிய நாட்டு தெரு வழியாக சென்று மீண்டும் ஆலய முகப்பை வந்தடைந்தது.
பக்தர்கள் வழி நெடுகிலும் தேர் மீது பூக்களை தூவி வழிபாடு செய்தனர். மேலும் அவர்கள் 'மரியே வாழ்க' என முழக்கங்களை எழுப்பினர். இவ்விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி வரும் 7ம் தேதி இரவு நடைபெற உள்ளது.