வாகன வரி உயர்வு மசோதா - ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால் தாமதம்!
தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான வரி உயா்வு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பழைய கட்டண முறையிலேயே வாகனங்களுக்கான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின் இறுதி நாளில், அனைத்து மோட்டார் வாகனங்களுக்கான வரியை உயர்த்துவதற்கு வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததுடன், மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பாமக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனாலும், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.
அதன்படி, ‘சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான பேருந்துகள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்துக்குப் பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், ’கேப்’கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரி நிர்ணயிக்கப்படுகிறது.
புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாத நிலையில் அதன் விலையில் 10%, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் என்றால் 12% என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய மோட்டார் சைக்கிள்களில் ஓராண்டு பழையதாக உள்ளவற்றுக்கு 8.25% (ஒரு லட்சம் ரூபாய்க்கு உள்பட்டவை) மற்றும் ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்டவற்றுக்கு 10.25%, ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் பழைமையான வாகனங்களுக்கு (ஒரு லட்சம் ரூபாய்க்கு உள்பட்டவை) 8%, ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்டவற்றுக்கு 10% என வாழ்நாள் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.
2 முதல் 11 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிக் கொண்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, 6%த்தில் இருந்து 9.75% வரை (அதன் விலைக்கு ஏற்ப) நிர்ணயிக்கப்படுகிறது. புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான வாழ்நாள் வரி, ரூ.5 லட்சம் ரூபாய்க்கு மிகாத நிலையில் அதன் விலையில் 12ற், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை என்றால் 13%, ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை என்றால் 18%, ரூ.20 லட்சத்துக்கு மேற்பட்டவற்றுக்கு 20% என நிர்ணயிக்கப்படுகிறது. புதிய வாகனங்களுக்கான சாலைப் பாதுகாப்பு வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனங்களுக்கான வரிகளை உயர்த்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிப்பார் எனவும், நவம்பா் 1-ம் தேதி முதல் புதிய வரி நடைமுறை அமலுக்கு வரும் எனவும் எதிர்பாா்க்கப்பட்டது. ஆனால், மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இதுகுறித்து, அரசுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ”சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆளுநர் ஒப்புதலைப் பெற்ற பிறகே, மசோதாக்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டமாக நடைமுறைக்கு வரும். அந்த வகையில், புதிய வாகன வரி விதிப்புக்கான சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை. இதனால் உயா்த்தப்பட்ட புதிய வாகன வரிகளை நவ.1 முதல் அமல்படுத்த முடியாத நிலை உள்ளது. மசோதாவுக்கு ஆளுநரிடம் இருந்து அனுமதி பெற்று நவம்பா் 10-ம் தேதிக்குள் புதிய வரிகளை அமலுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.